29
Wed, Mar
29 New Articles

முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் பெண்கள் திரண்டனர்.

Other

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு ஏராளமான பெண்கள் திரண்டனர்.

 

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்களும், பெண்களுமாக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைசெய்தபோது இறந்த வேலம்மாள் என்பவரின் கணவர் சோமு, அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் நெடுஞ்செழியன் கூறியிருப்பதாவது:–

தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பதிசாரம் ஊராட்சியில் வீரநாராயணமங்கல நெடுஞ்சாலை அருகே தேரேகால் கால்வாயை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சீரமைக்கும் பணி கடந்த 4–11–2015 அன்று நடந்தது. இந்த பணியில் வேலம்மாள், அன்னபாக்கியம், மாலா, அன்பாயி மற்றும் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் வேலம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி தோவாளை ஒன்றிய தி.மு.க. மற்றும் பல கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தின. அப்போது அரசு அதிகாரிகள் ஒரு மாதத்தில் வேலம்மாள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேலம்மாள் குடும்பத்துக்கு உள்ளாட்சித்துறை மூலம் உடனடியாக கிடைக்கக்கூடிய நிவாரணம் ரு.25 ஆயிரமும், அரசு வழங்கக்கூடிய ரூ.3 லட்சம் நிவாரண தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மயிலாடி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர் பேரூராட்சி தலைவர் சாய்ராம், துணைத்தலைவர் பாபு மற்றும் கவுன்சிலர்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தனித்தனியாக மனு கொடுத்தனர். 

அதில் விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரியிருந்தனர். மேலும் தங்களது பெயர் வறுமைக்கோடு பட்டியலில் இருந்தும் மயிலாடி பேரூராட்சி பகுதி புறக்கணிக்கப்படுவதாகவும், எனவே விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS