23
Thu, Nov
10 New Articles

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஆஸ்டின் எம்.எல்.ஏ.கலெக்டரிடம் மனு

Other

நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பில் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

 

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர். கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின் தலைமையில் வழுக்கம்பாறை ஊர் மக்கள் ஒரு மனுவை கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:–  

வழுக்கம்பாறை சந்திப்பில் நான்குவழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் பல வீடுகள் இடிக்கப்பட இருக்கின்றன. இந்த வீடுகளுக்கான இழப்பீட்டு தொகை மிகவும் குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போதாது. பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக வேறு இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்றால் அதிக தொகை  செலவிட வேண்டும். எனவே, நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் உள்ள பொருட்களை மாற்றி அமைப்பதற்கு வசதியாக 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். 

மனு அளித்து விட்டு வெளியே வந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஒரே பணியைத்தான் செய்கிறார்கள். எனவே, வளர்ச்சி பணிகளுக்காக ஒருவருக்கொருவர் கலந்து பேசி மக்கள் பணி ஆற்ற வேண்டும். இதில் பாதிப்பான நிலை உருவானதால் தான் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அதிகாரிகள் என்னை வந்து சந்தித்து பேசினர்“ என்றார்.

இதைப்போல திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் பகுதியில் இருந்து பொதுமக்கள் சிலர், அந்த பகுதியைச் சேர்ந்த டி.டேவிட்ராஜ் தலைமையில் நேற்று நாகர்கோவிலுக்கு வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “ஆற்றூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகில் செயல்பட்டு வரும் 2 மதுக்கடைகளால் பிரச்சினை ஏற்படுவதாகவும், எனவே, அந்த கடைகளை மாற்ற வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது. 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் ஏற்கனவே நடத்தப்பட்டது. அதில் பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவையும் அவர்கள் கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.

மேலும் கொல்லஞ்சி பகுதியைச் சேர்ந்த தூய்மைக் காவலர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் சிலரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவில், “நாங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை செய்தால் போதும் என்பதற்கான உத்தரவு வந்திருப்பதாக தெரிகிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே, ஆண்டு முழுவதும் வேலை தரவேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS