26
Wed, Jul
9 New Articles

மாலையில் திறந்து காலையில் மூடிய பேச்சிப்பாறை அணை

Other

நாகர்கோவில், ஜூன் 14: பேச்சிப்பாறை அணை நேற்று முன்தினம் மாலையில் திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலையில்  மூடப்பட்டது. தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 260 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்படுகிறது. நேற்றும் காலை முதல் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. 

மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டமும் மளமளவென்று உயர்ந்து வருகிறது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. சிற்றார் அணைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 254 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

அணை நீர்மட்டம் 37.65 அடியாக இருந்தது. அணைக்கு 1235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் அணை மூடப்பட்டது. அதே வேளையில் பெருஞ்சாணி நீர்மட்டம் 70.80 அடியாக இருந்தது. அணைக்கு 947 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மூடப்பட்டிருந்த பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வினாடிக்கு 260 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சிற்றார்-1ல் 12.06 அடியாக நீர்மட்டம் உள்ளது. 

அணைக்கு 174 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்-2ல் 12.76 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 280 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். அணைக்கு 34 கன அடி தண்ணீர் வரத்து காணப்

படுகின்ற நிலையில் 34 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நீர்வள ஆதார அமைப்பு சுப்பிரமணி கூறுகையில், பேச்சிப்பாறை அணையில் தொடர்ந்து தண்ணீர் தேக்குவதை கருத்தில் கொண்டு அணை மீண்டும் மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. 

77 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டி வருவதால் அணைக்கு எந்நேரமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.’ என்றார். மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 52.4 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால்வெட்டு, செங்கல் உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சாமித்தோப்பு பகுதிகளில் உப்பளத்தில் உப்பு உற்பத்தியும் தடைபட்டுள்ளது. அதே வேளையில் மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

 பாசனத்திற்கு அணை திறக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் சாகுபடி பணிகள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் அதே வேளையில் மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமும் காணப்படுகிறது. அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடற்கரையையொட்டிய பகுதியில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகள், மண்டபங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS