23
Sat, Sep
8 New Articles

குமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை ஆணையர்

Temple

கன்னியாகுமரி, அக்.12: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு நடத்தினார்.

 

தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி குமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு நடத்தினார். முன்னதாக குமரி மாவட்டம் வந்த அவரை மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் பாரதி வரவேற்றார். 

அதனைத் தொடர்ந்து, ஆணையர் வீரசண்முகமணி, குழித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி கட்டிட பணியினை ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

பின்னர் அவர், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளையும், திற்பரப்பு மகாதேவர் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது திற்பரப்பு மகாதேவர் கோவிலில் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்திட அறிவுரை கூறினார்.

தொடர்ந்து, மண்டைக்காடு, பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும்  கலசாபிஷேக திருப்பணிகளை ஆய்வு செய்து, கொடிமர திருப்பணியை விரைந்து முடிக்கவும், தை மாதத்தில் கலசாபிஷேகம் நடத்தவும் ஆணையிட்டார்.

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் பழுதடைந்துள்ள திருமண மண்டபத்தை பார்வையிட்டு, அதை புதுப்பிப்பது குறித்து மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 

பின்னர், நாகராஜா கோவிலில் கட்டப்பட்டு வரும் உலோகதிருமேனிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ராஜகோபுர மூலிகை ஓவியங்களை பார்வையிட்டு கோவிலில் சாமிதரிசனம் செய்தார். 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதியை புனரமைப்பது மற்றும் கடைகளுக்கு வாடகை நிர்ணயிப்பது குறித்து ஆலோசித்தார். 

இந்த ஆய்வின் போது, இணை ஆணையர் பாரதி, உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜன், மராமத்து பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன், தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர் சங்க மாநில செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS