குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (வியாழக்கிழமை) காலை கோவில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, வெள்ளி பல்லக்கில் அம்மன் பவனி, பக்தி பஜனை, கம்பராமாயணம் தொடர் விளக்கவுரை, மதியம் சமய மாநாடு, உச்சிகால பூஜை, மாலையில் மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து, யானை மீது சந்தனகுட ஊர்வலமும் பிள்ளையார் கோவில் பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காட்டிற்கு வந்தது . அதன் பின்னர் சிறப்பு பூஜை, இரவில் சமய மாநாடு, அத்தாள பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
6-வது நாள் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்கிற மகாபூஜை நடக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உள்ள தற்காலிக உண்டியல் மற்றும் நிரந்தர உண்டியல்கள் திருக்கோவில்களின் இணை ஆணையர் பொன்.சுவாமிநாதன் மேற்பார்வையில் திறந்து எண்ணப்பட்டன. அப்போது பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் என்ஜினீயர் அய்யப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் குழித்துறை தேவி கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.
கடந்த 29-ந்தேதி மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் உண்டியல் மூலம் ரூ.7 லட்சத்து 83 ஆயிரத்து 868 வசூலாகி இருந்தது. மேலும் 15 கிராம் தங்கம், 33 கிராம் வெள்ளியும் கிடைத்தது.