நாகர்கோவில், அக்.06: குமரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞர்கள் டிராவல்ஸ் நிறுவனங்களில் பணம் கட்டும் முன், வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவை தொடர்பு கொள்ளவும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்கிறவர்கள் போலி விசா மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வருகிறார்கள். சாதாரண கூலி தொழிலாளர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரை இதில் ஏமாற்றப்படுகிறார்கள். இது பற்றி தினமும் ஏராளமான புகார்கள் எஸ்.பி. அலுவலகத்துக்கு வருகின்றன.
ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் உள்ளனர். நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் செல்லும் இளைஞர்கள் பலர் போலி விளம்பரங்களை நம்பி, தவியாய் தவிக்கிறார்கள். இது போன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு உதவியாக குமரி காவல் துறையில் ேவலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டுவதற்கு முன், அந்த டிராவல்ஸ் நிறுவனம் உண்மை தன்மை வாய்ந்தது தானா? என்பது பற்றி பொதுமக்கள் இந்த மோசடி தடுப்பு பிரிவை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இதன் தொலைபேசி எண் 04652 220657 ஆகும். இது தவிர சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் மோகன் 94981 92414, ராமச்சந்திரன் 94862 15732 ஆகியோரையும் அந்தந்த மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் கூறும் அந்த டிராவல்ஸ் நிறுவனம் குறித்தும், அந்த நிறுவனம் உண்மையானது தானா? இதற்கு முன் ஏதாவது வழக்கு உள்ளதா? என்பது பற்றியும் விசாரித்து தகவல் கூறுவார்கள். எனவே வெளிநாட்டுக்கு செல்வதற்காக பணம் கட்டுவதற்கு முன் பொதுமக்கள் இந்த பிரிவை தொடர்பு கொள்ளுமாறு குமரி மாவட்ட காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த பிரிவு கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சில போன் கால்கள் வந்து, விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் விசாரிப்பதற்கான அழைப்புகள் வர வில்லை. ஆனால் பணம் கட்டி ஏமாந்து விட்டோம் என ஏராளமான புகார்கள் வருகின்றன. தினமும் எஸ்.பி. அலுவலகத்துக்கு இது போன்ற புகார்களில் பலர் வருகிறார்கள். எனவே முறைப்படி காவல்துறையில் விசாரணை நடத்திய பின்னர் தான் பணம் கட்ட வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது பற்றி எஸ்.பி. தர்மராஜன் கூறுகையில், பொதுமக்கள் நன்மைக்காக தான் இந்த பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். வெளிநாடு வேலைக்கு செல்லும் பட்டதாரி இளைஞர்கள் குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் சந்தேகங்களை சரி செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை அசோக்நகரில் உள்ள டி.என்.எச்.பி. காம்பளக்சில் இந்த அலுவலகம் செயல்படுகிறது.
இதன் தொலைபேசி எண் 044 24891337, 24745610. மேலும் www.moia.gov.in , www.overseasindian.in, www.poeonline.gov.in என்ற இணைய தள முகவரிகளில் சென்று சரிபார்த்து கொள்ளவும். சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம் ஆகும். இவ்வாறு செய்யும் புரோக்கர்கள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடு செல்பவர்கள் விமான பயணம் புறப்படும் கடைசி நேரத்தில் விசா ெபறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
BLOG COMMENTS POWERED BY DISQUS