கன்னியாகுமரி : ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என யுனிசெஃப் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை – ரூபெல்லா வேக்ஸின்) போட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, பல்வேறு வதந்திகளுக்கு இடையே, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதியன்று தொடங்கியது. இந்த முகம் கடந்த மாதம் 28-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஆனால், தடுப்பூசிகள் போடக் கூடாது என ஒரு சிலரும், தடுப்பூசிகள் போட வேண்டும் என ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவின. இதனிடையே, ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவி ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என யுனிசெஃப் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த யுனிசெப் மருத்துவர் ஜெகதீஸ் இதுகுறித்து கூறியதாவது: தமிழகத்தில் 30 ஆண்டுகளாக 9 மாதம் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் சமூக வலை தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தினார்.
BLOG COMMENTS POWERED BY DISQUS