19
Sun, Nov
11 New Articles

நாகர்கோவில் குடிநீரில் புழுக்கள்

Health

நாகர்கோவில், ஜுன் 06: நாகர்கோவில் நகரசபை மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிரிச்சி அடைந்தனர்.

 

நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்கான ஒரே நீராதாரம் முக்கடல் அணை. நாகர்கோவிலில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் வழியில் துவரங்காடு அருகே இந்த அணை உள்ளது. இங்கிருந்து குழாய்கள் மூலம் நாகர்கோவிலுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, கிருஷ்ணன்கோவிலில் உள்ள நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. 

அதன்பின்னர் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, அந்தந்த பகுதி மக்களுக்கு வாரத்துக்கு ஒருமுறையோ, இருமுறையோ வினியோகிக்கப்படுகிறது. 

இப்படி சுத்திகரித்து வழங்கப்படும் குடிநீர் சில இடங்களில் கலங்கலாக, குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதாக புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நீரேற்று நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான தண்ணீர் வந்ததையும், பிற இடங்கள் ஒருசிலவற்றில் கலங்கலாக வந்ததையும் கண்டறிந்தனர். எங்காவது குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால், தண்ணீர் கலங்கலாக சென்றிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இந்த நிலையில் கோட்டார் முதலியார்விளை பகுதியில் நேற்று காலை குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த தண்ணீரில் புழுக்கள் மிதந்தன. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில பெண்கள் அந்த தண்ணீரை பாட்டில் பிடித்து புழுக்கள் மிதந்ததை காண்பித்தனர். சில பெண்கள் அத்தியாவசிய தேவைக்காக அந்த தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தினர். வடிகட்ட பயன்படுத்தப்பட்ட துணியில் புழுக்கள் நெளிந்தன. 

புழுக்கள் கலந்த தண்ணீரையா இத்தனை நாட்களாக குடித்தோம்? என்று பொதுமக்கள் பெரிதும் ஆதங்கப்பட்டனர். இது தொடர்பாக நகரசபை அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. 

அதன் அடிப்படையில் நகரசபை தலைவர் மீனாதேவ் கிருஷ்ணன்கோவிலில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். முறையாக சுத்தப்படுத்தும் பணி நடந்ததா? குளோரின் சரியான அளவு தண்ணீரில் கலக்கப்பட்டதா? என்பது பற்றி அவர் கேட்டறிந்தார். இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS