23
Wed, Aug
6 New Articles

இந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு

Health

நாகர்கோவில், ஏப்.08: இந்தியாவில் 6 கோடி பேர் சர்க்கரை நோய பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் வடிவேல் முருகன் கூறினார்.

 

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 7-ந் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக சுகாதார தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குறிக்கோளோடு இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சர்க்கரை நோய் அதிகமாவதை தடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சுகாதார தினத்தையொட்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி பொதுமருத்துவத்துறை சார்பில் நேற்று காலை மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் கல்லூரி டீன் டாக்டர் வடிவேல் முருகன் தலைமை தாங்கி பேசினார். 

அப்போது மருத்துவர் வடிவேல் முருகன் கூறியதாவது,

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 6 கோடிக்கும் மேற்பட்டோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர பகுதிகளில் 100-க்கு 12 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் இறக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள் ஏராளமானோர் வேறு பல நோய்களின் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரகம், இருதயம், நுரையீரல், கணையம், கால்கள் என உடலின் பல்வேறு பாகங்கள் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ள வேண்டும். உணவு பழக்கவழக்கங்களை சரியாக கடைபிடிக்க வேண்டும். உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். சரியான அளவில் உடல் எடையை பராமரிக்க வேண்டும். பழவகைகள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் பிள்ளைகளுக்கு அந்த நோய் வராமல் தடுக்கலாம். அல்லது சிறுவயதிலேயே சர்க்கரை நோய் வருவதை தள்ளிப்போடலாம்.

இவ்வாறு டீன் வடிவேல் முருகன் தெரிவித்தார். இதே கருத்துக்களை பொது மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் பிரின்ஸ் பயசும் தெரிவித்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS