26
Mon, Jun
10 New Articles

குமரி மாவட்ட வங்கிகள்– தபால் நிலையங்களில் பணத்தை மாற்றுவதற்காக அலைமோதிய கூட்டம் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்பட்ட பணமும் தீர்ந்தன

Improvements

குமரி மாவட்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணத்தை மாற்றுவதற்காக கூட்டம் அலைமோதியது. ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்பட்ட பணமும் விரைவில் தீர்ந்தன.

 

கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளை தடுக்கவும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 500 ரூபாய், 1000 ரூபாய் வைத்திருந்த ஏழை, எளிய மக்களை பெரும் திண்டாட்டத்தில் ஆழ்த்தியது. செல்லாது என அறிவிக்கப்பட்ட பணங்களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து ஒரு நபர் ரூ.4 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் எனவும், டெபாசிட் செய்வதற்கு உச்சவரம்பு எதுவும் இல்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாகர்கோவில் வடசேரி ஸ்டேட் வங்கி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் உள்ள இந்தியன் வங்கி, கனரா வங்கி, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கோர்ட்டு ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றும் சிறப்புக் கவுண்ட்டர்கள் செயல்பட்டன. மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகள் நேற்று காலை திறப்பதற்கு முன்பே பொதுமக்கள் திரண்டு நின்றனர். கூட்டம் அதிகமாக, அதிகமாக அவர்களாகவே வங்கி திறக்கப்படும்வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த தபால் நிலையங்களில் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டு, அதன் அடிப்படையில் பணம் மாற்றி வழங்கப்பட்டது.

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணத்தை மாற்றியவர்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. நேற்றும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக வைத்திருந்தவர்கள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் டெபாசிட்டும் செய்தனர். இதனால் நேற்றும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பண பரிவர்த்தனை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக நடைபெற்றன.

ஏ.டி.எம். மையங்கள் 2 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்ற பிரதமரின் அறிவித்திருந்தார். நேற்று முன்தினத்தோடு 2 நாட்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 11–ந் தேதி அனைத்து ஏ.டி.எம்.களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே நாகர்கோவில் நகரில் பலர் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க அங்குமிங்குமாக இருசக்கர வாகனங்களில் அலைந்து, திரிந்தபடி இருந்ததை காண முடிந்தது.

கூட்டம் வருவதற்குள் பணம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையில் நேற்று அதிகாலையிலும் ஏராளமானோர் ஏ.டி.எம். மையங்களை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். ஆனால் ஏ.டி.எம். மையங்கள் நள்ளிரவிலோ, அதிகாலையிலோ திறக்கப்படவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் நேற்று காலையில்தான் திறக்கப்பட்டன. அந்த ஏ.டி.எம். மையங்கள் அனைத்திலும் கடும் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக வடசேரி ஸ்டேட் வங்கி கிளை ஏ.டி.எம்., மீனாட்சிபுரம் ஸ்டேட் வங்கி கிளை ஏ.டி.எம்., மணிமேடை பகுதியில் உள்ள கனரா வங்கி கிளை ஏ.டி.எம். போன்ற ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கும் வரிசையில் நின்றுதான் பணம் எடுத்துச் சென்றனர்.

வங்கிக்கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே பெற முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் பெரும்பாலும் 100 ரூபாய் நோட்டுகள் தான் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஏ.டி.எம்.களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு கிடைக்கும் என்ற ஆசையில் வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஏ.டி.எம். எந்திரங்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நிரப்ப கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பதாகவும், அந்த மாற்றங்களை செய்தபிறகே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். வேறுவழியின்றி அவர்கள் 100 ரூபாய் நோட்டுகளாக ரூ.2 ஆயிரத்தை எடுத்துச் சென்றனர்.

இதனால் பணம் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த ஏ.டி.எம். எந்திரங்களில் விரைவாகவே பணம் தீர்ந்து போனது. பின்னர் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீண்டும் பணம் நிரப்பப்பட்டன. இதேபோன்று மாவட்டம் முழுவதும் நேற்று காலை திறந்திருந்த ஏ.டி.எம். மையங்கள் அனைத்திலும் பெருந்திரளான கூட்டம் இருந்தது. அதேநேரத்தில் நாகர்கோவில் நகரின் சில இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.கள் நேற்று மதியம் வரை திறக்கப்படாமல் மூடப்பட்டே இருந்தன. இதனால் அந்த ஏ.டி.எம். மையங்களுக்கு வந்த பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மார்த்தாண்டத்தில் நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் வரை வங்கிகளில் ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு வங்கி ஊழியர்கள் வரும்முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிகளின் முன்பு கூடினர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர்.

 குலசேகரம் சந்தை பகுதியில் உள்ள வங்கிகளில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோல், தக்கலை, களியக்காவிளை, குளச்சல் போன்ற பகுதிகளிலும் வங்கிகளில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினர்.

 நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்த வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள், ஏ.டி.எம். மையங்கள் போன்றவற்றில் ரோந்து போலீசாரும், உள்ளூர் போலீஸ் நிலைய போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS