19
Sun, Feb
20 New Articles

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகர்கோவிலில் ரெயில் மறியல்

Improvements
Typography

நாகர்கோவில், அக்.18:  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் நலக்கூட்டணி கட்சிகளை சேர்ந்த 115 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி ஆதரவு தெரிவித்திருந்தன.

குமரி மாவட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் 17–ந் தேதி (நேற்று முன்தினம்) ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

போராட்ட அறிவிப்பின்படி நேற்று காலை 10 மணி அளவில் கோட்டார் கம்பளம் சந்திப்பு பகுதியில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகள் திரண்டனர். 

பின்னர் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி ஆகியோர்  தலைமையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் கிறிஸ்ட் ஜெரால்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, நகர செயலாளர் இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மாநில துணை செயலாளர் திருக்கடல் உதயம் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கட்சி கொடிகளை கையில் ஏந்தி கோட்டார் கம்பளத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

ரெயில் நிலையத்தின் முன் உள்ள ரவுண்டானா அருகில் போலீசார் இரும்பு தடுப்பு வேலி அமைத்து அவர்களை ரெயில் நிலையத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து மக்கள் நலக்கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளில் சிலர் போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிக்கு முன்பாக அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

 மொத்தம் 17 பெண்கள் உள்பட 115 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸ் வேன்களில் ஏற்றி வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS