19
Sun, Feb
20 New Articles

பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு

Improvements
Typography

நாகர்கோவில், ஏப்.13: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கும் குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. 

 

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தொடர்பாக சிறப்பு கணக்கெடுப்பு பணி மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.  குமரி மாவட்டத்தில் இந்த கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணியில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சைல்டு ஹெல்ப்லைன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கிராமப்புற செவிலியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்லூரி அளவிலான என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து இந்த கணக்கெடுப்பு பணி நடத்தப்பட உள்ளது.

கணக்கெடுப்பின்போது 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது, பள்ளி இடைநின்ற குழந்தைகள், சிறப்புக்கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ள குழந்தைகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. குடியிருப்புகள் வாரியாக இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வெளிமாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள குடும்பத்தினரின் குழந்தைகளும் இந்த கணக்கெடுப்பில் உட்படுத்தப்படும். 

இவ்வாறு கண்டறியப்படுகின்ற பள்ளி இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் பள்ளி இணைப்பு மையங்களில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு பின்னர் வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.முன்னதாக இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS