19
Sun, Feb
20 New Articles

10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து

Law
Typography

நாகர்கோவில், மே 22: நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற பள்ளி வாகனங்கள் ஆய்வில் 10 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி ரஜினிகாந்த் தலைமையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. அதிகாரிகள் அந்த வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி செயல்படுகிறதா? மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக இருக்கிறதா? பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களின் படிக்கட்டுகள் சரியாக இருக்கிறதா? அவசர வழி கதவு உள்ளதா? முதலுதவி பெட்டி உள்ளதா? தீயணைப்புக் கருவி செயல்படுகிறதா? பள்ளி மாணவ–மாணவிகளின் புத்தகப்பை வைக்குமிடம் அமைக்கப்பட்டுள்ளதா? என்பன போன்ற பல்வேறு விதிமுறைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

இதில் சில பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் விதிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டு பிடிக்கப்பட்டது. குறிப்பாக சில பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி செயல்படவில்லை. சில பஸ்களில் மாணவர்களின் புத்தகப்பை வைக்கக்கூடிய ரேக் இல்லாமல் இருந்ததும், வாகனங்களின் பிளாட்பாரங்கள் பழுதடைந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட 10 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றுகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும் மேற்கண்ட குறைபாடுகளை சரிசெய்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தினால்தான் இந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று புதுப்பித்து தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி வாகனங்கள் ஆய்வின் காரணமாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS