நாகர்கோவில், ஜூன், 17: தேசிய நெடுஞ்சாலையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டதால் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் பல பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முதல் கட்டமாக நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்பை அகற்ற திட்டமிட்டு, அந்த பகுதிகளின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் தனசேகர் மேற்பார்வையில் அதிகாரிகள், சாலை ஆய்வாளர்கள்,
சாலைப்பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். ராட்சத எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து கன்னியாகுமரி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நண்பகல் 12 மணி அளவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து சவேரியார் ஆலய சந்திப்புக்கு வரும் சாலையில் விநாயகர் தெரு சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றினர்.
இதுபற்றிய தகவல் அறிந்த அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் காரவிளை செல்வன், நகர செயலாளர் சந்திரன், வட்ட செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு, தொழிற்சங்க கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட கொடிக்கம்பத்தை சாலையில் போட்டு திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனே இதுபற்றிய தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் தனசேகர் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.வினர், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன் தகவல் தெரிவித்திருந்தால் நாங்களே கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படாத வகையில் அகற்றியிருப்போம். ஆனால் எந்த தகவலும் தெரிவிக்காமல் அ.தி.மு.க. தொழிற்சங்க கொடிக்கம்பத்தை அகற்றியதோடு, கல்வெட்டையும், கொடிக்கம்பத்தின் மேல்பகுதியில் உள்ள இரட்டை இலையையும் சேதப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதேசமயம் அ.தி.மு.க. கொடிக்கம்பத்தை மட்டும் அகற்றிய அதிகாரிகள் மற்ற கட்சி கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்று கூறியதோடு மற்ற கட்சிகளின் கொடிக்கம்பத்தையும் அகற்ற வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றிய கொடிக்கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். அதன் பிறகு அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அதிகாரிகள் கூறும்போது “தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் தொடர்பாக அந்தந்த அரசியல் கட்சியினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அவர்களே அகற்றாத பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றனர்.
இந்த சம்பவத்தால் நேற்று செட்டிகுளம் சந்திப்பு–கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பு சாலையிலும், செட்டிகுளம் பகுதியிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதியம் 1.15 மணிக்குப்பிறகே இந்த பகுதிகளில் போக்குவரத்து சீரானது. அதன்பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளும் தொடர்ந்தது.