23
Fri, Jun
10 New Articles

சுசீந்திரம்-ஈத்தங்காடு இடையே ரூ.241/2 கோடியில் புறவழிச்சாலை

Improvements

சுசீந்திரம், மே 03:  சுசீந்திரத்தில் இருந்து ஈத்தங்காடுக்கு ரூ.24½ கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை ஒன்றரை ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் ஒன்றாக நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த சாலையில் தினமும் உள்மாவட்ட வாகனங்கள் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் பல்லாயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. 

இந்த சாலையில் நாகர்கோவிலை அடுத்தாற்போல் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான ஆன்மிக பயணிகளும், வாகனங்களும் வந்து சென்ற வண்ணமாக உள்ளன. சுசீந்திரம் பகுதியில் பழையாற்றின் குறுக்கே குறுகலான பாலம் அமைந்திருப்பதால் சில நேரங்களில் சுசீந்திரம் பகுதியில் மட்டுமின்றி, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவாகும்.

இந்த போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதமாக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லக்கூடிய வாகனங்களை ஆஸ்ராமம் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக வழுக்கம்பாறையை அடுத்த ஈத்தங்காடு பகுதியில் சென்று சேரும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. சுசீந்திரம் நகருக்கான புறவழிச்சாலை என்ற பெயரிலான இந்த திட்டத்தை ரூ.24½ கோடியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு அமையக்கூடிய புறவழிச்சாலையில் ஒரு இடத்தில் பழையாற்றின் குறுக்கே பெரிய பாலம் ஒன்றும், 20 இடங்களில் வயல்களுக்கிடையே சிறு, சிறு பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த சாலையின் மொத்த நீளம் 3.6 கி.மீ. ஆகும். இந்த பணியை 1½ ஆண்டு காலத்தில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த புறவழிச்சாலைத் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது நிலத்தை சமப்படுத்தி, எல்லைக் கல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS