26
Wed, Apr
21 New Articles

கன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர் 

Law

கன்னியாகுமரி, அக்.02: கன்னியாகுமரி கடற்கரையில் குட்டி விமானம் மூலம் படம் பிடித்து வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று அதிகாலை ஆள் இல்லாத குட்டி விமானம் ஒன்று அங்கும் இங்கும் பறந்தபடி இருந்தது.

சுற்றுலா பயணிகள் அதை உற்றுப்பார்த்தபோது விமானத்தில் கேமரா பொருத்தப்பட்டு கடற்கரையை படம் பிடிப்பது தெரியவந்தது. அந்த விமானம் கடற்கரையை மட்டும் இன்றி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றையும் சுற்றி வந்து கேமராவில் படம் பிடித்தது.

தகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்பு போலீசார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது 3 வாலிபர்கள், ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் ஆள் இல்லாத குட்டி விமானத்தை இயக்குவதை கண்டனர்.

உடனே, போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்களிடம் இருந்த குட்டி விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர். மற்றவர்கள் டெல்லி மற்றும் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. குறும்படம் தயாரிப்பதற்காக படம் பிடித்ததாக தெரிவித்தனர். ஆனால் இதற்கான எந்தவித அனுமதியும் அவர்களிடம் இல்லை.

மேலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஆள் இல்லாத விமானம் மூலம் படம் பிடிக்க ஏற்கனவே தடை உள்ளது. அதையும் மீறி வட மாநில வாலிபர்கள் படம் பிடித்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

BLOG COMMENTS POWERED BY DISQUS