23
Sat, Sep
8 New Articles

வாக்குச்சாவடிகள் வரும் 12 ம் தேதிக்குள் தயாராகிவிடும் - நகராட்சி அதிகாரி

Politics

நாகர்கோவில், அக்.03: நாகர்கோவில் நகராட்சி பகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் 12–ந் தேதிக்குள் தயாராகிவிடும் என்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தெரிவித்தார்.

 

இதுதொடர்பாக அவர் கூறும்போது, 

குமரி மாவட்டத்தில் வருகிற 17 மற்றும் 19–ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு கவுன்சிலர், நகராட்சி வார்டு கவுன்சிலர் என மொத்தம் 2216 பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் நாகர்கோவில் நகராட்சியில் மொத்தம் 52 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த நகராட்சியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 318 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 164 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 142 பேரும், இதரர் 12 பேரும் அடங்குவர். இந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகள் 86–ம், பெண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகள் 86–ம், அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடி 34–ம் ஆக மொத்தம் 206 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

நாகர்கோவில் நகராட்சியில் வாக்குச்சாவடிகளை தயார் படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பார்வையிட்டு அவற்றில் அடிப்படை வசதி உள்ளதா? என்னென்ன குறைபாடுகள் உள்ளன? என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும்? என்பன குறித்து முதல்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைபாடுகளை சரிசெய்யும் பணி, வாக்குச்சாவடி எண் எழுதும்பணி போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக கூடுதலாக 15 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள பாதை வசதி இல்லாமல் இருந்தது. அவற்றில் தற்போது சாய்வுதள நடைபாதை வசதி ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS