24
Sun, Sep
8 New Articles

குமரி மாவட்டங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

Politics

குமரி மாவட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

தமிழக சட்டசபை தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் 15 லட்சத்து 38 ஆயிரத்து 920 வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்கள் வாக்களிக்க வசதியாக கன்னியாகுமரி தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 274 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 277 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 30 வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குச்சாவடிகளாகவும், 6 வாக்குச்சாவடிகள் அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தல் பணியில் 8,674 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும், பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் ஈடுபடுகிறார்கள்.

நேற்று தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களில் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை, முத்திரை, சீல் வைப்பதற்கு தேவையான அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கான பதிவேடுகள் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்று இருந்தன.

கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்கான “வி.வி.பேட்“ எந்திரம் சேர்த்து அனுப்பப்பட்டது.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டாவுடன் சேர்த்து 16 பெயர்கள்தான் இடம்பெற முடியும். ஆனால் நாகர்கோவில் தொகுதியிலும், விளவங்கோடு தொகுதியிலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 15–க்கும் அதிகமாக இருப்பதால் இந்த 2 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 

அதன்படி கன்னியாகுமரி தொகுதிக்கு 345 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், நாகர்கோவில் தொகுதிக்கு 630 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், குளச்சல் தொகுதிக்கு 342 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பத்மநாபபுரம் தொகுதிக்கு 308 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், விளவங்கோடு தொகுதிக்கு 626 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கிள்ளியூர் தொகுதிக்கு 319 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ஆக மொத்தம் 2570 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று காலையில் இருந்து மாலை வரை தூறல் மழை பெய்து கொண்டே இருந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியாக டிரங் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடி பொருட்கள் மழை பெய்தாலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்டு மூடை, மூடையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் அவை பாதுகாப்பாக, தார்ப்பாயால் மூடப்பட்டிருந்த டெம்போக்கள், மினி லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் வைத்து, மூடை, மூடையாக கட்டி வைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:–

அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழை பெய்தாலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்குச்சாவடி பொருட்களும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன. மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் இருக்கும். வாக்குச்சாவடி அதிகாரிகளும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருப்பார்கள். அதேநேரத்தில் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.

பதற்றமான, மிகவும் பதற்றமான 189 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 134 நுண்பார்வையாளர்கள் (மைக்ரோ அப்சர்வர்கள்) இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிப்பார்கள். மழை பெய்தாலும் பிரச்சினை இல்லாத வகையில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் 92.7 சதவீதம் பேருக்கு பூத் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்களில் பூத் ஸ்லிப்கள் கிடைக்காதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக்காட்டி வாக்களிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS