19
Sun, Nov
11 New Articles

வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் மாற்றம்

Politics

கன்னியாகுமரி, ஏப்.: குமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள் 29-ந் தேதியாகும். இதுவரை நடந்த சட்டசபை தேர்தலின்போது நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமாக நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகமும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களும் இருந்தன.

பத்மநாபபுரம் தொகுதிக்கு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமாக இருந்து வந்தது. 

ஆனால் இந்த தேர்தலில், அந்தந்த தொகுதியிலேயே வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்கனவே உள்ளவாறு நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மற்ற 4 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடிய இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதற்கான இடங்களை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடியவர்கள் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடியவர்கள் குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். விளவங்கோடு தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடியவர்கள் குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும், கிள்ளியூர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடியவர்கள் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையில் இடம் தேர்வு செய்துள்ளனர்.

இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் கலந்து கொண்ட அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்கனவே உள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் தொடர்பான விவரங்கள், அவற்றில் செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து படக்காட்சிகளுடன் விளக்கினர். பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசும்போது கூறியதாவது:-

வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்யும் நாட்களின்போது தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை பெற வேண்டும். வேட்பு மனு தாக்கலின்போது வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் ஆணைய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS