19
Sun, Nov
11 New Articles

கோடிக்கணக்கில் பணம்–நகை பதுக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Lifestyle Informations

சுசீந்திரம், டிச. 13:  கோடிக்கணக்கில் பணம், நகை பதுக்கிய சேகர் ரெட்டிக்கு உதவியவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

சுசீந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சுசீந்திரம் பாலம் திறப்பு விழா விரைவில் நடைபெறும். மேலும் தற்போது இந்த பகுதியில் ஏற்படும் கடுமையாக போக்குவரத்து நெருக்கடி காரணமாக மாலை நேரங்களில் மட்டும் புதிய பாலம் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படும். மற்ற நேரங்களில் பாலத்தை மூடி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரட்டை தலைமை ஆட்சி நடக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தமிழகத்துக்கு ஒரு முதல்–அமைச்சர் தான் இருக்கிறார். சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்பது அக்கட்சி உறுப்பினர்களின் முடிவு. அக்கட்சியின் விவகாரத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை. இது அந்த கட்சியின் முடிவுக்கு உள்பட்டது.

ஜெயலலிதா இறந்த பிறகு மத்திய அரசின் திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூறுவது தவறு. ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோதே இத்திட்டங்கள் குறித்து துறை அமைச்சர்கள் மற்றும் ஜெயலலிதாவின் முடிவுகள் படியே இத்திட்டங்களுக்கு முறையான அனுமதி பெறப்பட்டு நடந்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை அமைப்பதற்கான அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

சேகர் ரெட்டி இவ்வளவு பணம், நகை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு இந்த பணமும், நகையும் எப்படி கிடைத்தது என்பது பற்றி மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பணம், நகை கிடைக்க இவருக்கு உதவியவர்கள் யாரும் தப்ப முடியாது. அவர்கள் யார் என கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் கவர்னராக சுப்பிரமணிய சாமி நியமிக்கப்படுவாரா? என்பது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அடுத்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பா.ஜனதா தனித்தே போட்டியிடும். ஆனாலும், இதுகுறித்து இறுதி நேரத்தில் கட்சியின் மேலிடம் முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், சுசீந்திரம் மண்டல தலைவர் முருகேஷ், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்ட பொறியாளர் யூஜின் உள்பட பலர் உடனிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS