24
Sun, Sep
8 New Articles

நாகர்கோவிலில் 7 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம்

Towns

முக்கடல், அக்.13: முக்கடல் அணையில் ஒரு மாதத்துக்கு உரிய தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் நாகர்கோவில் நகர மக்களுக்கு தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

 

குமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை திகழ்கிறது. இந்த அணையின் தண்ணீர் முழுக்க முழுக்க குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அணையின் நீராதாரம் மழை மட்டுமே. இந்த அணையின் மொத்த கொள்ளளவு பிளஸ் அளவில் 25 அடியாகும். மைனஸ் அளவில் 20 அடி வரையிலும் தண்ணீர் எடுக்கலாம். அணையின் அடிப்பகுதியில் சேறும், சகதியும் அதிகமாக இருப்பதால் மைனஸ் 10 அடி வரை மட்டுமே தற்போது தண்ணீர் எடுக்க முடியும்.

கோடை காலங்களில் இந்த அணை வறண்டு விடும். ஜூன் மாதத்துக்குப் பிறகு பெய்யும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரு பருவமழைகளின்போது அணை நிரம்பி விடும். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது. அதன் பிறகு அணை தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக வறண்டு போவதால் 4 நாட்களுக்கு ஒருமுறை நகர மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிதண்ணீர் கோடை காலங்களில் 10 நாட்கள் அல்லது 12 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் வினியோகம் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் அணை நிரம்பவில்லை. நாகர்கோவில் நகராட்சி பகுதி மக்கள் மட்டுமின்றி வழியோரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவைவை பூர்த்தி செய்து வரும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி வெறும் 4 அடியாக இருந்தது. பாசனத்துக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் சிறிதளவை முக்கடல் அணைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதனால் தான் அணையின் நீர்மட்டம் 0.10 அடி குறைந்து வருகிறது. இல்லையென்றால் நாள் ஒன்றுக்கு அரை அடி வீதம் குறையும். அப்படிப்பார்த்தால் தற்போது இருக்கிற தண்ணீர் 15 அல்லது 20 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். பேச்சிப்பாறை–பெருஞ்சாணி அணைத்தண்ணீரை எடுத்து வருவதால் இருக்கிற தண்ணீரைக் கொண்டு ஒரு மாதம் வரை சமாளிக்கலாம் என்று நகராட்சி அதிகாரிகளால் கூறப்படுகிறது.

தண்ணீர் வெகுவாக குறைந்து வருவதின் காரணமாகவும், ஒரு மாதத்துக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருப்பதின் காரணமாகவும் நாகர்கோவில் நகரில் 5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர், தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை என வினியோகம் செய்யப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS