19
Sun, Feb
20 New Articles

இனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்

Towns
Typography

கன்னியாகுமரி, ஜுன் 07: கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு சுற்று வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 9 கிராமங்களை சேர்ந்த மக்கள் உண்ணாவிரத  போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் இனயம் வர்த்தக துறைமுகம் எதிர்ப்பு குழுவின் கூட்டம் இனயம் சமூக நலக்கூடத்தில் நடந்தது. இதன் தலைவர் டல்லஸ் தலைமை வகித்தார்.இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பேசும்போது, குமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமையக் கூடாது என்பது திமுகவின் நோக்கம் அல்ல. 

மக்கள் நெருக்கடி மிகுந்த இந்த இடத்தில் வர்த்தக துறைமுகம் அமைத்தால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இந்த துறைமுக பணிக்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கடலில் கல் போடப்படும் என்று கூறியுள்ளனர். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை தடுப்போம் என்றனர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேசும்போது, வர்த்தக துறைமுகம் எதிர்ப்பு குழு போராட்டக்கார்கள் எதை சொல்கின்றார்களோ அதை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். பா.ஜ அரசு மக்களை பழிவாங்குகிறது. குமரி மாவட்டம் திமுக-காங்கிரஸ் கோட்டையாகும். இதை யாராலும் மாற்ற முடியாது. ஆகவே இந்த மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களாகிய நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்காக குரல் கொடுப்போம் என்றனர். 

 தொடர்ந்து இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைய கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்தியில் ஆளும் பாஜ அரசு மற்றும் தமிழக அரசு, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS