26
Wed, Apr
21 New Articles

முக்கடல் அணையில் தேவையான தண்ணீர் இருப்பு

Towns

முக்கடல், ஏப். 05: முக்கடல் அணையில் கோடை காலத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால்   குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார் கூறினார். 

 

நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. முக்கடல் அணை முழுக்க, முழுக்க குடிநீருக்காக கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 25 அடியாகும். அணை வறண்டுபோகும்போது மைனஸ் அளவில் 25 அடி வரை இந்த அணையில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் குடிநீர் வினியோக கால இடைவெளி அதிகரிக்கும். அதாவது 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறையும், 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யும் நிலை ஏற்படும்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழையின்போது இந்த அணை நிரம்பி மாதக்கணக்கில் மறுகால் பாய்ந்தோடியது. பாசனத்தேவை பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்–1, சிற்றார்–2, பொய்கை போன்ற அணைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. நாகர்கோவில் நகரம் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் எடுக்கப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 11.85 அடியாக இருந்தது. 

இதுதொடர்பாக நாகர்கோவில் நகராட்சி என்ஜினீயர் சுரேஷ்குமார் கூறியதாவது:

நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 11.85 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகரில் வீட்டு குடிநீர் இணைப்பு, வணிக ரீதியான (கமர்சியல்) குடிநீர் இணைப்பு என மொத்தம் 38 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 230 லட்சம் லிட்டர் தண்ணீர் நாகர்கோவில் நகராட்சியின் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது நகரின் சில பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறையும், சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

முக்கடல் அணையில் தற்போதுள்ள தண்ணீரை 70 நாட்களுக்கு குடிநீருக்காக வினியோகம் செய்யலாம். அதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

கோடை காலத்திலும், தற்போது வழங்கப்படுவதைப்போன்று 5 நாட்களுக்கு ஒருமுறையும், 7 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். கால இடைவெளி அதிகரிக்காது. ஜூன் மாதத்தில் மழை பெய்யத்தொடங்கி விடுவதாலும், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விடுவதாலும் அதன்பிறகு குடிதண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இவ்வாறு என்ஜினீயர் சுரேஷ்குமார் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS