நாகர்கோவில், ஜன.26-குடியரசு தினவிழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியேற்றுகிறார்.
இந்தியாவின் 67-வது குடியரசு தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பிலான கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
விழாவையொட்டி இன்று காலை 8 மணிக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தேசியக்கொடி ஏற்றுகிறார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதுடன், அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். அதன் பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், வருவாய் அதிகாரி உதயகுமார் மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு விழா நடைபெறும் விளையாட்டு அரங்கம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலாத்தலங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து சென்றனர். மேலும் சோதனைச்சாவடிகளிலும் பலத்த சோதனை நடந்தது. பல இடங்களில் வாகன சோதனையை போலீசார் விடிய விடிய நடத்தினர். லாட்ஜ்களிலும் சோதனை நடந்தது.
இது தவிர ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளையும் போலீசார் பரிசோதித்தனர். பார்சல் கட்டுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். மாவட்டம் முழுவதும் இந்த பணியில் சுமார் 1200 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
BLOG COMMENTS POWERED BY DISQUS