நாகர்கோவில், ஏப். 01: போலி நிதி நிறுவனங்களிடம் அதிக பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என போலிசார் அறிவுரை கூறினர். பொதுமக்களுக்கு விழிபுணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சியை குமரி மாவட்ட குற்றப்பிரிவின் சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் நேற்று காலை நடந்தது.
பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பால்துரை, துண்டுபிரசுரம் வழங்கி பேசியதாவது:
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கட்டாயமாக இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண் டும். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ள நிதி நிறுவனங்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் வசூலிக்க முடியும். அதிகபட்சமாக 5 ஆண்டு முதிர்வு காலத்துக்கு மட்டுமே டெபாசிட் பெற முடியும். அதிகபட்சமாக 12.5 சதவீதம் மட்டுமே வட்டியாக தர முடியும். டெபாசிட் பெறுவதற்காக பரிசு பொருட்கள், ஊக்கத்தொகை முதலியவற்றை அளிக்க கூடாது.பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கி சாரா நிதி நிறுவனத்தில் செலுத்துவதற்கு முன் அல்லது அதுபோன்ற நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மிக அதிக வருமானம் கிடைக்கும் என்று அளிக்கப்படும் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஒரு நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், அந்த நிதி நிறுவனத்துக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் போதுமானதாக இருக்கிறதா, அந்த நிறுவனம் முறையாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஈமு கோழி, நாட்டு கோழி வளர்ப்பு திட்டம், கொப்பரை தேங்காய் திட்டம், ஆன்லைனில் குலுக்கல் நடத்தி பரிசு என பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதுடன், சந்தேக நபர்கள் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
குமரி மாவட்டத்தில் 1998ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு தொடங்கப்பட்டது. இதுவரை 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. இவற் றில் தற்போது 36 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மோசடி தொகை மொத்த மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என்று டி.எஸ்.பி. கூறினார்.