28
Tue, Mar
30 New Articles

அடை தோசை

Dinner

அடை

  தேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1 கப், கடலை பருப்பு - 1/2 கப்,

 உளுந்து - 1/4 கப்,  மிளகு-1/4 மேஜைக்கரண்டி, சீரகம் - 1/2  தேக்கரண்டி, கறிவேப்பிலை - 10 எண்ணிக்கை, மிளகாய் வத்தல் -  1 (அல்லது) மிளகாயப்பொடி -      1/4 மேஜைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு.

சேர்ப்பதற்கு :

  பொடியாக நறுக்கிய  வெங்காயம்  - 1/2 ( சின்ன வெங்காயம் - 10 அல்லது சிவப்பு வெங்காயம் ),  காயம் - 1/4 தேக்கரண்டி, தேங்காய் துருவியது -  4 மேஜைக்கரண்டி, கறிவேப்பிலை - 2 கொத்து. 

செய்முறை : 

     இட்லி அரிசியை கழுவி தண்ணீர் விட்டு ஊறவைக்கவேண்டும். உளுந்தும் கடலைப்பரும் சேர்த்து கழுவி சேர்த்தே ஊறவைக்கவேண்டும். இவை 2 ல் இருந்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.   ஊறியதும் முதலில் அரிசியை மிக்சியில் எடுத்து சீரகம், மிளகு, கறிவேப்பிலை மற்றும் மிளகாய் வத்தலாக இருந்தால் அதையும் எடுத்து அரைக்க வேண்டும் ரவை மாதிரி அரைக்க வேண்டும். நைசாகவும் அரைக்க கூடாது.  ரொம்ப சொற சொறப்பாகவும் இருக்க கூடாது.  இதை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் உளுந்தும், கடலை பருப்பும் சேர்த்து அரைக்க வேண்டும். இதையும் ரவை மாதிரி அரைக்க வேண்டும் இரண்டுக்குமே தண்ணீர் விட்டுக்கொள்ளலாம். உளுந்து பருப்பு கலவை சீக்கிரம் அரைந்து விடும் ஆகையால் இரண்டு சுற்று முடிந்ததும் எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும் . இதை அரைத்து முடித்ததும் அரைத்து வைத்த அரிசியுடன் சேர்த்துக்கொள்ளவும். இதில் உப்பு போட்டு பின்னர் சேர்ப்பதற்கு கீழ் உள்ள பொருட்களை எல்லாம் சேர்க்கவும். தோசை மாவை விட கொஞ்சம் தண்ணியாக கலக்க வேண்டும் உப்பு சரிபார்த்து கொள்ளவும்.  

   இப்போது அடை மாவு தயார். தோசைக்கல்லை நல்ல சுட வைத்து சுட்டதும் அடை மாவை விட்டு மெலிதாக பரப்பி விடவும். நல்லெண்ணெய் விட்டால் இந்த அடை தோசைக்கு நல்ல மணமும் சுவையுமாக நல்ல ருசியாக இருக்கும். பொறுபொறுப்பு பிடிப்பவர்கள் மெலிதாக விட்டு நல்ல வேக வைத்து எடுக்கவும். இல்லாவிட்டால் மிதமான மாவை விட்டு பரப்பி வெந்ததும் எடுக்கவும். பொதுவாக அடை தோசை, சாதாரண தோசையை விட வெந்து வருவதற்கு நேரமாகும். இதற்கு தேங்காய்த் துவையல், சீனி (SUGAR) , மிளகாய்ப்பொடி அல்லது சாம்பார் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.   

BLOG COMMENTS POWERED BY DISQUS