தேவையான பொருட்கள்: ஏத்தன் பழம்/ நேந்திரன் பழம் ( நல்ல பழுத்தது) - 2,
மைதா - 3/4 கப், சீனி (sugar) - 5தேக்கரண்டி, மஞ்சள் - 2சிட்டிகை, உப்பு- 1சிட்டிகை.
நிரப்புவதற்கு :
அவல்- 1/2 கப், துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி, சீனி(sugar) - 5 தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, சீனி, மஞ்சள், உப்பு ஆகியவற்றை எடுத்து நல்ல கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசைமாவு பக்குவத்தில் பிசைய வேண்டும். இதை தனியாக வைத்து விட வேண்டும்.
இப்போது அவலை முழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு கழுவி உடனே வடித்து விட வேண்டும் அதில் தேங்காய் துருவல், சீனி கலந்து தனியாக வைக்க வேண்டும்.
பழத்தை எடுத்து தோல் உரித்து 3 துண்டுகளாக வெட்டவும் .2 பழத்தையும் 3 துண்டுகளாக வெட்டவும். ஒவ்வொரு துண்டிலும் ஒரு பக்கத்தை விட்டு விட்டு மற்றொரு பக்கத்தில் ஒரு விரல் அல்லது இரண்டு விரல் நுழையும் அளவிற்கு கத்தி வைத்து வட்டமாக துளையிட வேண்டும். இந்த துளை அடுத்த பக்கத்தை கிடத்தட்ட தொடும் அளவிற்கு இட வேண்டும்.வெட்டி எடுத்த பழத்தை எடுத்து வைக்கவும். கடைசியில் தேவைப்படும். நல்ல பழுத்த பழம் என்பதால் கவனமாக கத்தியை வைத்து வெட்ட வேண்டும் . இல்லாவிட்டால் வடிவம் இல்லாமல் சிதைந்து போக வாய்ப்புண்டு. இதேமாதிரி மற்ற 5 துண்டுகளையும் வெட்ட வேண்டும்.
வெட்டிய பின் தயார் செய்து வைத்துள்ள அவலை ஒவ்வொரு பழத்துளையிலும் வைத்து நிரப்ப வேண்டும். எவ்வளவு தூரம் அடைக்க முடியுமோ அவ்வளவு அவளையும் அடைக்க வேண்டும். அதே நேரத்தில் பழம் பிய்ந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். இப்போது .எடுத்து வைத்த எஞ்சிய பழத்தை வைத்து துளையை அடைக்க வேண்டும். நிறைய வைத்து அடைக்க வேண்டும் என்றில்லை அவல் வெளியே விழாதளவுக்கு அடைக்க வேண்டும்.
இப்போது ஒரு வாணலியை எடுத்து எண்ணைய் விட்டு சுட வைக்க வேண்டும்.எண்ணைய் காய்ந்ததும் மிதமான தீயில் வைக்க வேண்டும். கூட்டி வைத்தால் மாவு சீக்கிரம் வெந்து கரிய ஆரம்பிக்கும் ஆனால் பழம் வேகாமல் இருக்கும். பழம் எண்ணையில் முழ்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் அடைத்து வைத்துள்ள பழத்தை எடுத்து கலந்து வைத்துள்ள மைதா மாவில் நன்கு பஜ்ஜிக்கு முக்குவதைப்போல் முக்கி எண்ணையில் போட வேண்டும். எல்லா பழமும் மாவில் பட்டிருக்க வேண்டும். மிதமான தீயில் நல்ல பொன்னிறமாக மாறி வெந்ததும் எடுத்து எண்ணையை வடிகட்டி பின்பு பரிமாறவும். மாலை நேர சுவையான சிற்றுண்டி.
BLOG COMMENTS POWERED BY DISQUS