தேவையான பொருட்கள்: கோதுமை ரவை - 1 கப், தேங்காய் துருவல் - 1 கப்,
உப்பு ஒரு சிட்டிகை, மிதமான தண்ணீர் 1 கப்.
செய்முறை :
ஒரு அடிப்பிடிக்காத வாணலியை எடுத்து மிதமான தீயை வைத்து கோதுமை ரவையை நன்கு வறுக்க வேண்டும். தீயை மிதமாக வைத்தால் தான் எல்லா ரவையும் ஒன்றுபோல் வறுபடும், ஒரு 10 நிமிடம் வறுக்க வேண்டும். வறுத்த ரவையை நன்கு ஆற விடவும். நன்கு ஆறியபின் ரவையில் உப்பு சேர்த்து நன்கு கலந்து பின்பு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து கலக்க வேண்டும். கலந்து முடித்ததும் ரவையில் நன்கு ஈரப்பதம் இருக்க வேண்டும். அரிசி புட்டுக்கு சரியான பதம் என்றால் தண்ணீர் விட்டு விரவியதும் ஒரு பிடி மாவை எடுத்து கொழுக்கட்டை மாதிரி உருட்டும் போது அப்படியே நிற்க்க வேண்டும் மாவு உதிர்ந்து போக கூடாது. ஆனால் கோதுமை ரவை புட்டிற்க்கு உருட்டினால் மாவு நிற்க்காது உதிர்ந்து விடும். ஆனால், நன்கு ஈரப்பதம் இருக்க வேண்டும்.
பின்பு ஒரு புட்டுக்குழல் எடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி தேங்காய் துருவலை எடுத்து எல்லா இடமும் அடைத்தபடி போடவேண்டும். அதன்மேல் விரவிய கோதுமை ரவையை எடுத்து 5 மேஜைக்கரண்டி நிரப்பவேண்டும். நிரப்பியது எல்லா இடமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பின்பு இதன்மேல் ஒரு மேஜைக்கரண்டி தேங்காய் துருவலை நிரப்பவேண்டும். இதே மாதிரி மீதமுள்ளதை நிரப்பி 15 நிமிடம் வேகவிடவும். அடுத்த குழல் நிரப்பும் போது ரவையில் ஈரப்பதம் குறைந்ததுமாதிரி இருந்தால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். இந்த ரவையுடன் பழம், சீனி, வேகவைத்த சிறுபயறு, பப்படம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்
BLOG COMMENTS POWERED BY DISQUS