26
Wed, Apr
21 New Articles

மூலச்சலில் தேசிய கபடிப் போட்டி ஆரம்பம்

Entertainment

Dec 25 2015: குமரி மாவட்டம் மூலச்சலில் கிளாரிங் பிரண்ட்ஸ் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான இருபாலர் கபடிப் போட்டிகள் சனிக்கிழமை (டிச.26) தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகின்றன.

 

இதுகுறித்து குமரி மாவட்ட கபடிக் கழகச் செயலர் சுபாஷ், மூலச்சல் கிளாரிங் பிரண்ட்ஸ் கிளப் தலைவர் சி. சந்திரசேகர், செயலர் ஜி. ஞானஜெபின் ஆகியோர் கூறியது: மூலச்சல் கிளாரிங் பிரண்ட்ஸ் ஸ்போட்ஸ் கிளப் 30 ஆண்டுகளாக கபடி விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது அகில இந்திய அளவிலான ஆண், பெண் ஏ- கிரேடு மின்னொளி கபடிப் போட்டிகளை இம்மாதம் 26முதல் 29 ஆம் தேதி வரை மூலச்சலில் நடத்தவுள்ளது. இதில், இந்தியன் ரயில்வே, ஏர் இந்தியா மும்பை, இஎம்இ போபால், ரெட் ஆர்மி, ஆர்டிலரி ஹைதராபாத், பாபா ஹரியானா, ஐசிஎப் தமிழ்நாடு தபால் துறை, பிஎம்டபிள்யூ பஞ்சாப் உள்ளிட்ட ஆண்கள் அணிகள் பங்கேற்கின்றன.

மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, தேனா வங்கி மும்பை, ஆலுவா பெங்களூர், அசோக் சிங்கால் கொல்கத்தா, சாவித்ரி மும்பை ஆகிய பெண்கள் அணிகள் மற்றும் குமரி மாவட்ட அணிகள் என 30 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவுக்கு முதல்பரிசு ரூ. 1 லட்சம், 2 ஆவது பரிசு ரூ. 75 ஆயிரமும், 3 ஆவது பரிசு இரு அணிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். பெண்கள் பிரிவுக்கு முதல் பரிசு ரூ. 50 ஆயிரமும், 2 ஆவது பரிசு ரூ. 40 ஆயிரம், 3 ஆவது பரிசு இரு அணிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.  ஆண்கள் கபடியை ரூபன் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம். ரூபன், பெண்கள் பிரிவு கபடியை அர்ஜூனா விருதுபெற்ற கபடி வீரர் ராஜரத்தினம் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர் என்றனர் அவர்கள். அப்போது, கிளப் பொருளாளர் சி. செல்வின், செயற்குழு உறுப்பினர் எப். ஜூட்ஸ் பிராங்கோ உடனிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS