குமாரகோயிலில் நேற்று நடந்த திருக்கல்யாண விழாவில் வள்ளியை முருக பெருமான் மணமுடித்தார். பாரம்பரியமிக்க குறவர் படுகளமும் நடந்தது.
குமாரகோயில், மார்ச் 19: வேளிமலை குமாரசாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று முருகன்–வள்ளி திருக்கல்யாண உற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி, இந்த ஆண்டின் திருக்கல்யாண விழா நேற்று முன்தினம் காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. மாலை 6.30க்கு முருகப்பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாவது நாளான நேற்று காலை 5.30க்கு சுவாமி வள்ளிக்குகை அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். மதியம் சுவாமி வள்ளி நாயகியுடன் மலையில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் நடந்த குறவன் படுகளத்தில் முருகப்பெருமானிடம் குறவர்கள் சரணடைந்தனர். அதன் பின் முருகனும் வள்ளியும் கோயிலுக்கு சென்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு முருகப்பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் திருக்கல்யாண முகூர்த்தம் நடந்தது. அப்போது தேன், தினைமாவு. அமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு சுவாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லாக்கு வாகனத்திலும் எழுந்தருளினர்.
நிகழ்ச்சியில், கோயில் மேனேஜர் மோகன குமார், மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ், பா.ஜ., மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், சுப்புலட்சுமி, வேல்முருகன் சேவா சங்கம் மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் சுகுமாரன், கிருஷ்ணன் வகை பா.ஜ., நிறுவன தலைவர் ராமதாஸ், பா.ஜ., நகர நிர்வாகி சண்முகம், திருவிழாக்குழு பேட்ரன் பிரசாத், தலைவர் மாதவன் பிள்ளை, செயலாளர் சுனில்குமார், பொருளாளர் தாணுமூர்த்தி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், செந்தில்குமார், லெதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று சுவாமியும் அம்மனும் பூப்பல்லக்கில் எழுந்தருளல், நான்காம் நாள் விழாவான நாளை இரவு 9 மணிக்கு மயில், கிளி வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நடக்கிறது. ஏழாம் விழாவான வியாழனன்று சுவாமியும் அம்hபாளும் மயில், கிளி வாகனத்தில் ஆறாட்டுக்கு எழுந்தருளுகின்றனர்.
BLOG COMMENTS POWERED BY DISQUS