25
Sat, Mar
29 New Articles

சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்

Hindu

கலியுக கடவுளான அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி இன்று நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.

 

முன்னதாக நேற்று காலை அய்யா அவதரித்த திருச்செந்தூர் கடற்கரையில் இருந்து அய்யா வழி பக்தர்கள் வாகனங்களில் ஊர்வலமாக நாகர்கோவிலுக்கு வந்தனர். அதேபோல மற்றொரு ஊர்வலம் அய்யா வைகுண்டர் ஜெயிலில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கியது. இந்த 2 ஊர்வலங்களும் நேற்று மாலை நாகர்கோவில் நாகராஜா திடலை வந்தடைந்தது. நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யா வழி பக்தர்களின் மாசி மாநாடு நடந்தது. இதில் அய்யா வழி அறிஞர்கள் பங்கேற்று சொற்பொழிவாற்றினர். அய்யா வழி இன்னிசை நிகழ்ச்சி, சிறுவர், சிறுமிகளின் கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து அய்யா அவதார தின ஊர்வலம் சாமிதோப்புக்கு புறப்பட்டது. அய்யா அருளிய அகில திரட்டு ஏடு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. நாதஸ்வர இசை ஒலிக்க வாணவேடிக்கையுடன் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு தலைமை பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். அய்யாவின் வாகனத்தை பின் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்று அய்யா சிவ சிவ, அரகரா அரகரா என்ற திருநாமத்தை உச்சரித்தப்படி சென்றனர். பெண்கள் கையில் காவிக்கொடியை ஏந்திச் சென்றனர். ஊர்வலத்தின் முன்னால் சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். வழிநெடுகிலும் அய்யா வாகனத்துக்கு கிறிஸ்தவர், முஸ்லீம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் வரவேற்பு அளித்தனர். அய்யா வழி பக்தர்கள் சுருள் படைத்து வழிபட்டனர். ஊர்வலத்தில் சென்ற பக்தர்களுக்கு அவல், குளிர்பானங்கள், மோர் போன்ற அன்னதர்மங்களும் வழங்கப்பட்டன. ஊர்வலம் கோட்டார், சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பை சென்றடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவதார தினத்தையொட்டி இன்று சாமிதோப்பு தலைமை பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முத்திரி கிணற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பதியில் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அய்யாவை வழிபட்டனர். ஊர்வல வழிநெடுகிலும், சாமிதோப்பிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அவதார தினத்தை முன்னிட்டு இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. சாமிதோப்பை போல மற்ற அய்யா வழி பதிகளிலும், தமிழகம் முழுவதும் உள்ள நிழல் தாங்கல்களிலும் இன்று அய்யா அவதார தின விழா கொண்டாடப்பட்டது. பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, தொட்டில் உற்சவம் மற்றும் வாகன பவனியும் நடத்தப்பட்டது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS