23
Fri, Jun
10 New Articles

சுசீந்திரம் கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம்

Hindu

சுசீந்திரம்,ஜன.11:  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் பவனி வந்தார். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. காலை 6.50 மணிக்கு சாமியும், அம்பாளும் மேள-தாளத்துடன் வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியே ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

8 மணிக்கு அம்பாளுடன் கூடிய சாமியும், அறம்வளர்த்த நாயகி அம்மனும், விநாயகரும் தனித்தனியாக வாகனங்களில் எழுந்தருளி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மேள- தாளத்துடன் வந்தனர். பின்னர் அம்பாளுடன்கூடிய சாமி பெரிய தேரிலும், அறம்வளர்த்த நாயகி அம்மன் அம்மன் தேரிலும், விநாயகர் பிள்ளையார் தேரிலும் எழுந்தருளினர்.

பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேரின் வலதுபக்க சக்கரத்தில் சந்தனம் தெளித்தும், தேங்காய் உடைத்தும், மாலை அணிவித்தும் தீபாராதனை காட்டப்பட்டது. காலை 8.15 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பெரியதேர், அம்மன்தேர் இழுக்கப்பட்டது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் 3 தேர்களுக்கும், புதிய தேர் பட்டால் அலங்கரிக்கப்பட்டு தேர்கள் கம்பீரமாக உலா வந்தன.

தேரோட்ட விழா நிகழ்ச்சியில், விஜயகுமார் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, உதவி கலெக்டர் ராஜ்குமார், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முத்துக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரநாராயணன், திருக்கோவில் பணியாளர்கள் சங்க செயலாளர் ஜீவானந்தம், அ.தி.மு.க நிர்வாகிகள் தம்பித்தங்கம், ஆறுமுகம் , வீரபுத்திரப்பிள்ளை, வழுக்கம்பாறை ராஜலிங்கம், பொன்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாய்ராம், முருகேஷ், சுப்பிரமணியபிள்ளை, முத்து, முன்னாள் துணைத்தலைவர் கதிரேசன், தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் சோமு திருக்கோவில் ஒப்பந்ததாரர்கள் மோகன்தாஸ், கணேசன், பகவதியப்பன், மூர்த்தி, வடிவேல் முருகன் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் குடும்பம்- குடும்பமாக சுசீந்திரத்தில் குவிந்தனர். இதனால் கோவிலை சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாகவே காட்சியளித்தது. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்கள், நான்கு ரதவீதிகளை சுற்றி மதியம் 12.40 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தன.

அதனைத்தொடர்ந்து சாமி, அம்பாள், முன்னுதித்த நங்கையம்மன், ஏழகரம் விநாயகர் போன்ற சாமிசிலைகள் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டன. தேரோடும் ரதவீதியில் பக்தர்களுக்கு பானக்காரம், மோர், பழம், தண்ணீர் மற்றும் அன்னதானம் ஆகியவை பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டன.

தேரோட்டம் நிகழ்ச்சியையொட்டி சுசீந்திரத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேரோட்டம் காணவந்த பக்தர்களுக்கு வசதியாக கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

BLOG COMMENTS POWERED BY DISQUS