29
Wed, Mar
29 New Articles

இன்று வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

Hindu

நாகர்கோவில், ஜன.08:  பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் வைகுண்ட ஏகாதசி விழா குமரி மாவட்ட பெருமாள் கோயில்களில் இன்று கொண்டாடப்படுகிறது.

 

பெருமாள் பக்தர்கள் மாதம்தோறும் வரும் ஏகாதசி தினத்தில் உபவாச விரதம் இருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பிறவிப்பெருங்கடலை கடந்து வைகுண்டபதவியை அடைவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆண்டு முழுவதும் மாதம் இரண்டுமுறை வரும் ஏகாதசி தினத்தில் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் மட்டுமாவது விரதம் இருந்தால் இறை அருள் பூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகாபாரத யுத்தம் துவங்கிய போது எதிரில் உறவினர்கள் நிற்பதை கண்டு மனம்கலங்கி போர் புரிய மாட்டேன் என்று தேர் தட்டில் தளர்ந்துபோய் அமர்ந்து விட்டார் அர்ஜூனன். அப்போது கண்ணன் திருவாய் மலர்ந்து வாழ்க்கை தத்துவத்தையும், ஆத்ம தத்துவத்தையும் போதித்தார். அந்த போதனை தான் கீதை எனும் வடிவம் பெற்றது. கிருஷ்ணன் கீதையை உபதேசித்த தினம் வைகுண்ட ஏகாதசி என்பதால் இதை கீதா ஜெயந்தி எனவும் விஷ்ணு பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இதனால் வைகுண்ட ஏகாதசி அன்று உணவருந்தாமல் விரதம் இருக்கும் பக்தர்கள் கீதா பாராயணம் செய்வதை காணமுடியும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பச்சை தண்ணீர் கூட அருந்தாமல் கீதை ராமாயணம், விஷ்ணுபுராணம் உள்ளிட்டவைகளை பாராயணம் செய்வார்கள். பகலில் மட்டுமல்லாது இரவும் கண்விழித்து பாராயனம் செய்வதையும் சில பகுதிகளில் காணமுடியும். சில பக்தர்கள் தண்ணீர், துளசி மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். கடும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருப்பதும் உண்டு. அப்படி சாப்பிடும்போது பெரும்பாலும் எளிதில் ஜீரணம் ஆகும் பழவகைகளை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். மாதம் இரண்டு முறை ஏகாதசி நாளில் உபவாசம் இருப்பதால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைவதுடன் ஜீரண உறுப்புக்கள் பலமடைகின்றன. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி தினத்திலாவது உபவாச விரதம் இருப்பது ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பது பெரியோர்களது கருத்தாக உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு அடுத்தநாளான துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்கிறார்கள். துவாதசி அன்று யாருக்காவது நெல்லிக்காய் தானம் செய்வது மிகவும் புண்ணியத்தை சேர்க்கும் என்பது ஐதீகம். எட்டு வயது குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை யார் வேண்டுமானாலும் ஏகாதசி விரதம் கடைபிடிக்கலாம்.

இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி மற்றும் டிசம்பர் 29ம் தேதி என இரண்டு முறை வைகுண்ட ஏகாதசி விழா வருகிறது. எட்டாம் தேதியான இன்று பெருமாள் கோயில்களில் சொக்கவாசல் திறக்கும் விழா நடக்கிறது. அதிகாலையில் சொக்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அப்போது கோவிந்தா, கோபாலா என பக்தர்கள் விண்ணை பிளக்க பக்தி பரவசத்துடன் கோஷம் போடுவார்கள். வைகுண்ட ஏகாதசி தினமான இன்று பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS