07
Tue, Dec
0 New Articles

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

Hindu

மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம் இன்றைய கேரளா.

கடவுள்களின் இருப்பிடம் என்றழைக்கப்படும் கேரளா உருவெடுக்க காரணமாக இருந்தவர் பரசுராமர் என்று புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமை மிகுந்த கேரளாவில் பகவதி அம்மன் கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே இடப்பெயருடன் இணைத்து பகவதி என்றே அறியப்படுகின்றனர். இருப்பினும் எந்த அம்மன் கோவில்களுக்கும் இல்லாத சிறப்பு திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கும் அந்த அருள் வழங்கும் அம்மனுக்கும் உண்டு. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா இந்த ஆலயத்தின் சிறப்புக்கு குறிப்பிடும்படியான ஒரு காரணமாக இருக்கிறது எனலாம். இது பல லட்சம் பேர் அதுவும் பெண்கள் மட்டும் திரண்டு நடத்தும் பொங்கல் திருவிழா. அருள் சுரந்திடும் அம்மனின் மகிமையால், நலம் பல பெற்று வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்னையின் கடைக்கண் பார்வையால் எண்ணியதையடைந்து நற்பலன் பெற்றிட்ட நங்கையரும், வழிபட்டுத் தங்கள் வேண்டுதலை சமர்ப்பிக்கும் மங்கையரும் கூட்டம் கூட்டமாக நாளுக்கு நாள் அதிக அளவில் பொங்கல் படைத்திட வருவதால் பொங்கல் விழா உலக சாதனை விழாவாக மாறியுள்ளது.

30 லட்சம் பெண்கள் 1997-ல் பிப்ரவரி 23-ம் தேதி நடந்த பொங்கல் வைபவத்தில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டதாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பொங்கல் விழா முதலில் இடம் பிடித்தது. பின் அது 2009 மார்ச் 10ம் தேதி நடந்த பொங்கல் விழாவில் 30 லட்சம் பெண் பக்தைகள் கலந்து கொண்டதாக முன் சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் மீண்டும் இடம் பிடித்தது! உலகப்பிரசித்தி பெற்றது! ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே ஊரில் ஒரே அம்மனை வழிபட்டு பல லட்சம் பெண்கள் மட்டும் பொங்கலிட்டு சிறப்படையச் செய்யும் அம்மன் ஆலயம் அபூர்வ ஆலயம் வேறு எங்கும் இல்லை என்றே கூறலாம். கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் அதாவது திருவனந்தபுரம் நகரில் சாலையோரங்கள், வீட்டு வளாகங்கள் சந்து முனைகள் எல்லா இடங்களிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர்.

தினசரி பொங்கல் படைப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் தினமும் பக்தர்கள் பொங்கல் படைத்து வழிபடுவதுண்டு. பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் சமர்ப்பித்து உரிய கட்டணம் செலுத்தினால் கோவிலில் பொங்கல் தயாரித்து அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழங்குவார்கள். ஆனால் பொங்கல் விழா தினத்தன்று ஊரில் லட்சக்கணக்கான பெண்கள் தாங்களே பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

கண்ணகிக்கு நைவேத்யம் தனது வெஞ்சினப் பார்வையினால் மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக பெண்கள், தேவிக்கு பொங்கல் படைத்து நைவேத்யம் செய்வதாக ஓர் ஐதிகம் பிரபலமாக உள்ளது. மகிஷாசுரவதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை பெண் பக்தைகள் பொங்கல் நைவேத்யம் சமர்ப்பித்து வரவேற்றனர் என மற்றொரு கதையும் உண்டு. பொங்கலுக்கு புதுமண்பானை, பச்சரிசி, சர்க்கரை, நெய், தேங்காய் ஆகியவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்வசக்தி சொரூபிணியான ஆற்றுக்கால் அம்மாவை நினனத்து விரதசுத்தியுடன் தவமிருந்து அஷ்டசித்தி பெற்றிடவே பெண்கள் பொங்கல் படைக்கின்றனர். மாசிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கும் பொங்கல் விழா சடங்குகளுடன், பூரநட்சத்திரமும், பவுர்ணமி நன்னாளும் இணையும் ஒன்பதாவது தினத்தில் பொங்கல் வைபவம் நடைபெறுகிறது. தொடர்ந்து தேவி நகர்வலம் நடைபெறும். பத்தாம் திருவிழா நாளில் இரவு நடைபெறும் (குருதி தர்ப்பண விழா) நிறைவு சடங்குகளோடு விழா நிறைவுபெறும். முதல் தினம் பந்தல் கெட்டி குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கண்ணகி கதை பாடலாகப் பாடப்பெற்றது (தோற்றம் பாட்டு) தேவியை குடியிருத்து கின்றனர். கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் செய்து இந்த பத்து தினங்களும் குடியிருக்கச் செய்வதாக சங்கல்பம். விழா காலகட்டத்தில் எல்லா தினமும் இரவு தீபாராதனை முடிந்து, நடை சாத்துவதற்கு முன்னால் பலவித வர்ணக் காகிதங் களாலும் குருத்தோலை களாலும் தீப அலங்காரத் தாலும் அலங்கரிக்கப் பட்டு தேவி சிலையை அதன் நடுவில் அமர வைத்து சுமந்தபடி வழிபாடுகளாக அனேக விளக்குக் கட்டுகள் கோவிலை சுற்றிலும் நடனமாடியபடி வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். ஒவ்வொரு வருடமும் வழிபாடு விளக்குக் கட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

செண்டை மேளமும் வாய்க்குரவையும் திருவிழாவின் ஒன்பதாவது தினம் பிரபலமான ஆற்றுக்கால் பொங்கல் நடைபெறும். கோவிலின் முன்பக்கம் பந்தலில் அமர்ந்து பாடும் கண்ணகி வரலாற்றில் பாண்டிய மன்னர் வதம் நடைபெறும் கதைப் பகுதி முடிந்ததும் உடனடி தந்திரி கருவறையிலிருந்து தீபம் ஏற்றி மேல் சாந்தியிடம் (தலைமை பூஜாரியிடம்) வழங்குவார். அன்னார் கோவில் (திடப்பள்ளியில்) பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார். பின்னர் அதே தீபச்சுடரை சக பூஜாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன் உள்ள பண்டார அடுப்பில் (கோவில் வகை அடுப்பில்) தீ மூட்டுவார். தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும். இதற்கான அறிவிப்புக்காக செண்டை மேளமும் வெடிமுழக்கமும், வாய்க்குலவையும் ஒலிக்கும். பெண்கள், குலவை ஒலியுடன் தங்கள் அடுப்புகளில் தீ மூட்டுவார்கள். லட்சக்கணக்கான அடுப்புகளிலிருந்து எழும் புகைப்படலம் ஆற்றுக்கால் என்ற இடத்தையும், சுற்றுப்புறப் பகுதிகளையும் ஓர் யாகசாலையாக மாற்றிவிடுகிறது. பிற்பகல் குறிப்பிட்ட வேளையில் பக்தி பரவசமான சூழ்நிலையில் கோவிலிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ள பூஜாரிகள் புனிதநீர் (தீர்த்தஜலம்) தெளித்து பொங்கல் நைவேத்யம் செய்வார்கள். அது சமயம் வானத்திலிருந்து விமானம் வழி 'மலர்' தூவப்படும். தாங்கள் படைத்திட்ட வழிபாடு நைவேத்ய படையலை ஆற்றுக்காலம்மன் ஏற்றுக்கொண்டாள் என்ற திருப்தியுடன் பெண் பக்தர்கள் பொங்கல் பானைகளுடன் திரும்புவார்கள்.

கண்ணகி இளைப்பாறிய இடம்

சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல என்பதை மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு மதுரையை “தீ”க் கிரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள் என்றும், அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறுமிகளின் தாலப்பொலி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும், அன்று காலையில் சிறுமிகள் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்தை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்துத் திரும்புவார்கள். இதை 'தாலப்பொலி' என்கிறார்கள். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து தலையில் மலர்க்கிரீடம் சூடி கையில் தாம்பாளம் ஏந்தி அதில் அம்மனுக்கு பூஜைக்குரிய பொருட்கள் வைத்து சிறு தீபம் எற்றிக்கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர் உறவினர்களும் வருவார்கள். இப்படி செய்வதால், அந்த சிறுமிகளுக்கு நோய் நொடிகள் வராது, அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும், எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்கிறார்கள்.

சிறுவர்களின் குத்தியோட்டம்

சிறுவர்களின் குத்தியோட்டமும் சிறப்பு மிக்கதாகும். அதாவது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துகிறார்கள். அவர்கள் மகிஷாசுரமர்த்தினியின் காயமடைந்த போர் வீரர்களாக கருதப்படுகிறார்கள். திருவிழா தொடங்கிய மூன்றாம் நாள் சிறுவர்கள் தலைமை பூஜாரியிடம் பிரசாதம் பெற்று கோவிலில் தனி இடத்தில் ஏழு தினங்கள் தங்கி விரதம் கடைபிடிக்கின்றனர். நீராடி அம்மன் சன்னிதானத்தில் ஈர உடையுடுத்தியபடி ஏழுதினங்களில் 1008 நமஸ்காரத்தை முடித்திருக்க வேண்டும். இந்த குத்தியோட்டம் எனும் விரதத்தை சிறுவர்கள் கடைபிடிப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. பொங்கல் தினத்தன்று சிறுவர்கள் முருகன் கோவிலில் அலகு குத்துவது போல் விலா எலும்புகளின் கீழ் உலோகக் கம்பி கொக்கியால் குத்தியிருப்பார்கள். பொங்கல் வைத்து முடித்ததும் இவர்கள் யானை மீது ஊர்வலமாக எழுந்தருளும் அம்மன் முன் அணிவகுத்துச் செல்வார்கள். மறுநாள் காலையில், அவர்களது உடலில் குத்தப்பட்டிருந்த கம்பிகள் அகற்றப்பட்டு விரதம் நிறைவு பெறும். கோவில் அமைப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத்தகடால் வேயப்பட்டது. கோவிலில் சக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் மேல் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூலவிக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை கோவில் என்று அழைக்கப்படுகிறது. வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

அமைவிடம்:-கிழக்கு கோட்டை சிட்டி பஸ் நிலையத்திலிருந்து தெற்கே 2.கி.மீட்டர் தொலைவில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் அமைந்துள்ளது. திறக்கும் நேரம்:- காலை 5 முதல் 12 வரை மாலை 5 முதல் 8 வரை

BLOG COMMENTS POWERED BY DISQUS