22
Mon, May
14 New Articles

புத்தாண்டையொட்டி கோவில்களில் அலைமோதிய கூட்டம்

Community Informations

கன்னியாகுமரி, ஜன.02: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் கூட்டம் அலைமோதியது.

 

2016–ம் ஆண்டு முடிவடைந்து 2017–ம் ஆண்டு நேற்று பிறந்தது. புத்தாண்டு பிறப்பு குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு பிறப்பு ஆராதனை, சிறப்பு ஜெபம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இதுபோல குமரி மாவட்ட இந்து கோவில்களில் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, வாயிற் பகுதி வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நாகராஜரை தரிசித்தனர். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டார்கள்.

புத்தாண்டையொட்டி வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சாமிக்கு திருக்கல்யாணம் முடிவடைந்ததும் அங்கு வந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS