23
Sat, Sep
8 New Articles

திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

Community Informations

கன்னியாகுமரி, டிச.29- கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றமாக இருந்தது. இதனால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

 

கடல் சீற்றம் குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை கடலோர பகுதிகளில் நேற்று கடல் சீற்றமாக இருக்கும். மேலும் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய கடல் தகவல் சேவை மையம் கூறியது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விட்டிருந்தது.

அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சில இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதே நேரத்தில் சூறாவளி காற்றும் வீசியது. கன்னியாகுமரியில் கடல் அலை பாறையில் மோதி பல அடி உயரத்துக்கு எழும்பியது.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை கடல் சீற்றமாக இருந்ததால் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோல் வள்ளம், கட்டுமர படகுகளும் மீன்பிடிக்கசெல்லவில்லை. இதனால் கடற்கரையோரம் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சூறைக்காற்றினால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் போக்குவரத்தை சரிசெய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் சாய்ந்து விழுந்தன.

கமாண்டோ வீரர்கள் வருகை: கடல் சீற்றத்தின் முன்எச்சரிக்கை காரணமாக கடலோர அதி தீவிர கமாண்டோ வீரர்கள் 10 பேர் சென்னையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோசுடன் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 20 பேரும் தயார் நிலையில் இருந்தனர்.இவர்கள் 30 பேரும் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவினர் கன்னியாகுமரியிலும், ஒரு குழுவினர் குளச்சலிலும், ஒரு குழுவினர் கூடங்குளத்திலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நவீன படகுகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து ரத்து கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நேற்று முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS