13
Thu, Dec
8 New Articles

குமரி மாவட்டத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்

News

குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி, நவ.14:  குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் சன்னதியில் 41-வது ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரபத்மன் என்ற சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு மகா கணபதிஹோமம், 11 மணிக்கு அபிஷேகம் அலங்காரம், மதியம் 1.30 மணிக்கு தீபாராதனை, சுவாமி அம்பாளுக்கு சீர்செய்தல், மதியம் 2 மணிக்கு வேல்வாங்க புறப்படுதல் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு சுவாமி சூரனை வதம் செய்ய புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.

நான்கு ரதவீதிகளிலும் சுற்றி வந்த பின்னர் மாலை 6.30 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அப்போது முருகப்பெருமான் சூரனை வேலால் குத்தி வதம் செய்தார். அப்போது திடலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி, முருகனை வழிபட்டனர். சூரசம்ஹார நிகழ்ச்சியின் முடிவில் வாணவேடிக்கை நடந்தது. இரவில் சுவாமி மயில் வாகனத்தில் அமர்ந்து ரதவீதி பவனி வருதல் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

சஷ்டி விழாவின் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் நாகராஜா கோவில் கலையரங்க மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

மருங்கூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. மாலை 3 மணிக்கு சுப்பிரமணியசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS