20
Tue, Nov
11 New Articles

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

News

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி, அக்.22 :  கன்னியாகுமரியில் 9 இடங்களில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியிலும் சுற்றுலா மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே.அல்போன்ஸ் கண்ணதானம், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

பின்னர் மத்திய மந்திரி கே.ஜே.அல்போன்ஸ் கண்ணதானம் கூறுகையில், மத்திய அரசின் சுவதேஷ் தர்சன் திட்டத்தின் கீழ் கடலோர பகுதிகளை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள் நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் ரூ.32 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை பகுதிகளை இணைக்கும் பாலம் உள்பட பல மேம்பாட்டு திட்டப்பணிகள் தொடங்க உள்ளது. தமிழக அரசு அறிவித்த ரோப் கார் திட்டத்தில் மத்திய அரசின் 20 சதவீதம் பங்களிப்புடன் வேலைகள் நடைபெறும் என்றார்.

தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சபரிமலை அய்யப்பன் கோவிலை சிறப்பு சட்டம் மூலம் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று பக்தர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது. இதுதொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

சபரிமலைக்கு சென்ற பெண்களின் நோக்கம் என்ன?. அவர்கள் இருமுடிக்குள் வைத்து இருந்ததை கேள்விபடும் போது, மற்ற மதத்தினர் அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்களின் செயல்களை ஏற்றுக்கொள்வார்களா?. அந்த பெண்களுக்கு போலீசாரே தங்களது உடையை கொடுத்ததாக தெரிகிறது. இது மிகவும் தவறு. இதை வைத்து பார்க்கும் போது சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுவது போன்று தெரிகிறது. அ.தி.மு.க. சர்க்கஸ் கூடாரம். அதன் ரிங் மாஸ்டர் மோடி என்று ஸ்டாலின் பேசி இருக்கிறார். இது வரம்பு மீறிய பேச்சு.

இவ்வாறு அவர் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS