26
Wed, Sep
1 New Articles

குமரி மாவட்டத்தில் 12 மதுக்கடைகள் மூடல்

News

கோர்ட்டு உத்தரவை அடுத்து குமரி மாவட்டத்தில் 12 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன.

நாகர்கோவில், மே 01: குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 136 மதுக்கடைகள் இருந்தன. கடந்த ஆண்டு இறுதியில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகே இருந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. பல கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து சாலைகளை வகை மாற்றம் செய்து புதிதாக மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சித்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நிலவரப்படி குமரி மாவட்டத்தில் 103 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல் அந்த சாலைகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால் அப்படிப்பட்ட கடைகளை உடனே மூட வேண்டும் என்று ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி சாலையாக வகை மாற்றம் செய்யாமல் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் செட்டிகுளத்தில் 2, குளச்சலில் 2, வடசேரி, ராமன்புதூர், துவரங்காடு, தம்மத்துக்கோணம், அம்மாண்டிவிளை, புதுக்கடை, அழகியமண்டபம் மற்றும் இரணியல் ஆகிய இடங்களில் தலா ஒரு கடையும் என மொத்தம் 12 மதுக்கடைகள் நெடுஞ்சாலைகளின் ஓரம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 12 கடைகளும் நேற்று காலை மூடப்பட்டது.

இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘குமரி மாவட்டத்தில் தற்போது மூடப்பட்டுள்ள 12 மதுக்கடைகளும் நெடுஞ்சாலையின் ஓரம் செயல்பட்டு வந்தது. அந்த நெடுஞ்சாலையை உள்ளாட்சி சாலையாக மாற்றம் செய்யாததால் கோர்ட்டு உத்தரவுபடி 12 கடைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மூடப்பட்ட கடைகளில் இருந்த மதுபானங்களை குடோனுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேறு கடைகளில் பணி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS