13
Thu, Dec
8 New Articles

கன்னியாகுமரி சரக்குபெட்டமுனைய பணி 2018ல் துவங்கும்

News

கன்னியாகுமரி சரக்கு பெட்டக முனையம் அடுத்தாண்டு (2018) துவங்கும் என்று தென்தாமரைகுளத்தில்  பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்த துறைமுக திட்ட அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.

கன்னியாகுமரி, டிச.28: கன்னியாகுமரி சர்வதேச சரக்குபெட்டக முனையம் சுமார் 30 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முனையத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் அதிகாரிகள் - பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று தென்தாமரைகுளம் தாமரை சக்திமஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சஜித் தலைமை வகித்தார். துத்துக்குடி வஉசி துறைமுகதிட்ட அதிகாரி ஜெயக்குமார், துறைமுக செயற்பொறியாளர்கள் பெபின், கார்த்திகேயன், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் திவான், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ்,  சிவராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தென்தாமரைகுளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு, இலந்தையடிவிளை, கோயில்விளை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் சந்தேகங்களுக்கு துறைமுக அதிகாரிகள் விளக்கமளித்தனர். இத்திட்டம் குறித்து துறைமுக திட்ட அதிகாரி ஜெயக்குமார் கூறும் போது;- இந்த பகுதியில் அமையவுள்ள சர்வதேச சரக்கு பெட்டக முனையம் இந்தியாவிலேயே ஒரு வீடு மற்றும் நிலப்பகுதிகள் பாதிக்கப்படாமல் அமையும். பொதுமக்கள் நடமாட்டமும், மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைதிரும்பும் பகுதியாக இல்லை. இதனால் கடற்கரையில் இருந்து நிலப்பரப்பில் 100 மீட்டரும், கடலின் உட்புறத்தில் இரண்டரை கிலோ மீட்டர் துரத்திலும் அமைக்கப்படுகிறது. மத்திய சுற்றுபுறசூழல் அமைச்சகத்தின் வரைபடஅனுமதி கிடைத்தவுடன் பணி துவங்கும். அடுத்தாண்டு (2018) முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு படிபடியாக 3 கட்டங்களாக நடக்கும். தற்போது நமது நாட்டின் சரக்குகள் அண்டை நாடான இலங்கை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பலில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நம்நாட்டிற்கு 1,500 கோடிரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த துறைமுகம் அமையும் போது இந்தியாவிற்கு அந்த தொகை இழப்பு ஏற்படாது. இந்த துறைமுகம் அமையும் போது இந்த பகுதியில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பு கிடைக்கும். இந்த துறைமுகத்திற்காக 100 மீட்டர் அகலமுள்ள சாலை 3 கி.மீட்டர் துாரத்தில் உருவாக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.  பொதுமக்களின் சந்தேகங்களுக்கு துறைமுக அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ஆகியோர் உரிய விளக்கமளித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS