15
Fri, Dec
18 New Articles

ஆடம்பர விழாக்கள் வேண்டாம் நிவாரண பணிகளில் கவனம் செலுத்துங்கள்:ஸ்டாலின்

News

ஆடம்பர விழாக்களை நடத்தாமல் தமிழக அரசு நிவாரணப்பணிகளில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நாகர்கோவில், டிச.05:  குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் மற்றும் பயிர் சேதங்களை பார்வையிட்டார். முட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட துறைமுகத்தை விசைப்படகில் சென்று பார்வையிட்டார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், ஆஸ்டின், பிரின்ஸ், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன், மகேஷ், சிவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் பாதிப்பு குறித்து திமுக மற்றும் கூட்டணிக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் ஆய்வு மேற்கொண்டேன். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு ஒகி புயலால் ஏற்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது கடலோர மக்கள்தான் பாதிக்கப்பட்டனர். கடந்த 1991ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் இந்த அளவு சேதம் ஏற்படவில்லை. இப்போது ஏற்பட்ட ஒகி புயலால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். கடந்த 29ம் தேதி வானிலை ஆய்வு மையம் விடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீனவர்களுக்கு தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இதை நான் சென்ற இடங்களில் மக்கள் என்னிடம் கூறினார்கள். மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. 40 சதவீதம் அளவுக்கே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     மீனவர்களுக்கு ஜிபிஏஸ் கருவி வழங்கப்படும் என்று அதிமுக கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் அதை இதுவரை நிறைவேற்றவில்லை. கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்கள் ஆயிரம்பேர் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசோ நூற்றுக்கணக்கில்தான் என்று குறிப்பிடுகிறது. இது குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மேலும் மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு போதிய சுறுசுறுப்பு காட்டவில்லை என்று மீனவர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையாக 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி இதுவரை உயிரிழந்த 7 மீனவர்களுக்கு 28 லட்சம் ரூபாய் வழங்கியது போக இருக்கும் மீதி பணம் நிவாரணத்தொகைக்கு போதாது.

பக்கத்து மாநிலமான கேரளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.  அதுபோல தமிழகத்திலும் வழங்க வேண்டும். புயலுக்கு பின் ஏற்பட்ட மழையால் பல்லாயிரம் ஏக்கரில் நடப்பட்டிருந்த நெல் பயிர்கள், வாழை, ரப்பர் மரங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நெல் பயிருக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ரப்பர் பால் உற்பத்தி செலவை அரசே ஏற்க வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு மறு சீரமைக்க புதிய வீடு கட்ட அரசு நிதி உதவி செய்ய வேண்டும். ஆடம்பர விழாக்களை நடத்தாமல் தமிழக அரசு நிவாரணப்பணிகளில் போதிய கவனம் செலுத்த வேண்டும். ஒகி புயல் பாதிப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள 3 அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் குமரி மாவட்டத்தில் தங்கியிருந்து பணிகளை மேற்பார்வையிட்டனர். இதனால் எந்த பயனும் இல்லை. இது வரை இழப்பீடு குறித்து கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரை  சந்தித்த ஸ்டாலின் நிவாரண பணிகளை முடுக்கிவிடவேண்டும் என வலியுறுத்தினார். மேலும் நான் கூறினால் நீங்கள் பணி செய்யப் போவதில்லை. நிவாரண பணிகளை முடுக்கிவிட தமிழக அரசை வலியுறுத்துங்கள் என ஸ்டாலின் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS