15
Fri, Dec
18 New Articles

ஒகி புயல் : வாழ்வாதாரத்தை இழந்த ஆதிவாசி கிராம மக்கள்

News

பேச்சிப்பாறை ஆதிவாசி கிராமங்களில் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் முழுமையாக சீர்குலைந்து ஆதிவாசி மக்கள் பரிதவிக்கின்றனர்.

திற்பரப்பு, டிச.05:  ஒகி புயலால் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அனைத்து பகுதி மக்களும் மீளாதுயரில் உள்ளனர். மலை கிராமங்களில் மரங்கள் சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பேச்சிப்பாறை பகுதியை சார்ந்த மலை கிராமங்களில் ஏற்பட்ட சேதம் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக சீர்குலைத்துள்ளது. பேச்சிப்பாறை காயல் பகுதியின் மறுகரையிலுள்ள தச்சமலை உட்பட ஆதிவாசி கிராம மக்கள் வெளிப் பகுதிக்கு வர முடியாமல் 5 நாட்களாக தவித்து வருகின்றனர்.

  கிள்ளிக்கோணம், ஆலம்பாறை, வலியமலை, படுபாறை, வில்லுசாரி மலை பகுதியிலுள்ள ஆதிவாசி மக்கள் பெரும் துயரத்தை தாண்டி சனி இரவு ஆலம்பாறை அரசு பள்ளியிலும், புறா விளை அங்கன்வாடியிலும் தஞ்சமடைந்தனர். தகவல் அறிந்து திற்பரப்பு கிராம அதிகாரி நவநீதகிருஷ்ணன் அப்பகுதிகளில் முகாம் அமைத்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி அமைப்பினர் உணவு வழங்கினர். தொடர்ந்து மூன்று நாட்களாக தனிநபர்கள் உதவியோடு  உணவு மற்றும் மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர். சப் கலக்டர் ராஜகோபால் சுங்காரா முகாமை பார்வையிட்டு அரசு உதவிகள் பெற்று தருவதாக உறுதியளித்தார். அதன்படி மக்கள் சப் கலெக்டரிடம்மனு கொடுத்தனர்.  இது போன்று பேச்சிப்பாறை வனத்துறையில் தேக்கு மரங்கள் சாய்ந்ததில் டி.பி ரோட்டிலுள்ள சுமார் 18 வீடுகள் தகர்ந்துள்ளது. இதில் உடல் நலம் பாதித்த தங்கமணி என்பவரது வீடு முழுமையாக தகர்ந்தது. மேலும் பேச்சிப்பாறை பகுதியில் மரம் விழுந்து சுமார் 90 வீடுகள் சேதமடைந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS