15
Fri, Dec
18 New Articles

தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை :சுகாதாரத்துறை தகவல்

News

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாகர்கோவில், டிச.03:  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒகி புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறையினால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு தேவைப்படக்கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப இந்த முகாம்களை அதிகப்படுத்தவும் மாவட்ட அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 54 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் 36 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகின்றனர்.  இந்த நடமாடும் மழைக்கால மருத்துவ வாகனத்தில் தேவையான அளவு மருந்துகள், மாத்திரைகள், சிரப்பு மற்றும் களிம்புகள் ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத் துறையினரால் தண்ணீர் மூலம் பரவும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குளோரின் பரிசோதனை குழுக்கள் உறுதி செய்கின்றன.  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 39 குளோரின் பரிசோதனை குழுக்கள் செயல்படுகின்றன. டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரிலும் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிகப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு மழையின் பொழுதும், மழைக்குப் பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  மேலும் இச்சிறப்பு மருத்துவ குழுக்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில்  பொது மக்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்பு மூலமாக பிளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தண்ணீர் வடிந்த இடங்களில் தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் மின் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்கு பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் நியமிக்கப்பட்டு களத்தில் பணியாற்றி வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான சுகாதார ஆலோசனைகளுக்காக 104 மற்றும் 1077 மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு மைய எண்களான 044-24350496, 24334811, 9444340496 ஆகியவற்றை தொடர்புகெண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS