15
Fri, Dec
18 New Articles

புரட்டிப் போட்ட ஓகி புயல்

News

புயல்-மழையால் கடும் சேதம். ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. மின்சார ‘சப்ளை’ துண்டிக்கப்பட்டது. தொடர் மழைக்கு 5 பேர் பலி ஆனார்கள்.

கன்னியாகுமரி, டிச.1:  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.  இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நேற்று காலை புயல் சின்னமாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல்-மழை கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. பலத்த மழையும் கொட்டியது.  சுழன்று வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நள்ளிரவில் இருந்தே மின்தடை ஏற்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

விடிய விடிய கொட்டிய மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. நாகர்கோவில்  நேற்று காலையில் இருந்தே பஸ் போக்குவரத்து தடைபட்டது. பல இடங்களில் செல்போன் கோபுரங்கள் சேதம் அடைந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சூறைக்காற்று மற்றும் கனமழையால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் பணிக்கு செல்லவில்லை. 

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் ஒரு மரம் அரசு பஸ் மீது விழுந்ததால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதனால் தக்கலை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து பெரும்பாலான கிராமப்புற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. ரெயில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

சாலைகளில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சில இடங்களில் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழும்பின. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மீனவ கிராமங்களில் ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் புயல், மழைக்கு நேற்று 5 பேர் பலி ஆனார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கார்த்திகைவடலியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45) என்பவர் தென்னை மரம் முறிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதுபோல் பளுகல் பகுதியில் வீட்டின் மீது மரம் சாய்ந்ததில் தூங்கிக்கொண்டிருந்த அலெக்சாண்டர் (60) என்பவர் பரிதாபமாக இறந்தார். மண்டைக்காடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (60) என்பவர் வீட்டுக்கு வெளியே குளித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது மரம் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பால்கிணற்றான் விளையை சேர்ந்த குமரேசன் என்பவரும் நேற்று மரம் விழுந்து பலி ஆனார்.

மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 70 வீரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

சுசீந்தரம் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் ஆபத்து காலங்களில் பொதுமக்களுக்கான அவசர எண்களை வெளியிட்டுள்ளது.

அவசர கால உதவி எண்கள்: 1077 04652231077 9442480028 9445008139

 

BLOG COMMENTS POWERED BY DISQUS