23
Thu, Nov
10 New Articles

ஐகோர்ட்டு உத்தரவு : நாகர்கோவிலில் பேனர்கள் அகற்றம்

News

நாகர்கோவில், அக்.26:  சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக, நாகர்கோவில் நகரில் பொது இடங்களில் உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

உயிருடன் இருப்பவர்களின் படத்துடன் பொது இடங்களில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவை வைக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து, உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் நாகர்கோவில் நகரில் பொது இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் பேனர்களை உடனே அகற்றும்படி அதிகாரிகளுக்கு நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.

அதன்படி நகர அமைப்பு அதிகாரி (பொறுப்பு) கெவின்ஜாய் தலைமையில் அதிகாரிகள் நேற்று நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சி பேனர்கள், சினிமா விளம்பர பேனர்கள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.

அந்த வகையில் மணிமேடை, ஒழுகினசேரி, வடசேரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, டதி பெண்கள் பள்ளி சந்திப்பு, கேப் ரோடு, கோர்ட்டு ரோடு மற்றும் கோட்டார் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்து சுமார் 30–க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

சில சினிமா தியேட்டர்களின் காம்பவுண்டு சுவர் மீது உயரமான அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை உடனே அகற்றும்படி தியேட்டர் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தினர். அகற்றப்பட்ட பேனர்கள் வாகனம் மூலம் நகராட்சி அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி பொது இடங்களில் இனி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS