19
Thu, Oct
19 New Articles

குமரியில் மீண்டும் தலையெடுக்கும் டெங்கு மரணம்:இந்த ஆண்டில் மூன்றாவது சீசனால் மக்கள் பீதி

News

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக டெங்கு ஆட்டிப்படைப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நாகர்கோவில், அக்.12: மழைக்காலம் வந்தாலே இலவச இணைப்பாக டெங்கு காய்ச்சலும் வருவது வாடிக்கையாகிவிட்டது. இப்போது தமிழகம் மூழுவதும் மழை பரவலாக பெய்த நிலையில் டெங்கு காய்ச்சலும் அதி வேகமாக பரவ துவங்கிவிட்டது. இதனால் வியாழக்கிழமைகள் தோறும் டெங்கு விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிடுள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த சீசனில் டெங்கு மரணம் இல்லை என இறுமாந்திருந்த சமயத்தில்தான் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்த பூசாரி கண்ணன் டெங்குக்கு பலியாகியிருக்கிறார். இதனால் குமரி மாவட்டத்தை மீண்டும் டெங்கு பீதி ஆட்டிப்படைக்கிறது.

இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் விட்டுவிட்டு பெய்த மழையால் குமரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. டெங்கு காய்ச்சலால் நாகர்கோவில் நகராட்சி பகுதியை சேர்ந்த பகவதியம்மாள் (60) மற்றும் சரஸ்வதி(63)  இறந்தனர்.

இதை தொடர்ந்து நாகர்கோவில் நகராட்சியில் டெங்கு பாதித்த பகுதிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முகாமிட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாகசென்று நல்ல தண்ணீர் தேங்கி உள்ளதா என்பது குறித்து தொடர் ஆய்வு செய்தனர். டெங்கு பரவ காரணமான ஏடிஸ் கொசு ஒழிப்பு பணியும் அப்போது நடந்தது. அதன்பிறகு புதிதாக யாருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் பெருமிதம் கொண்டிருந்தனர். அந்த நிலையில்தான் கடந்த ஜூலை மாதத்தில் கேரளம் மற்றும் தமிழகத்தில் மழை பெய்தது. அப்போதும் குமரி மாவட்டத்தில் கால இடைவெளி விட்டுத்தான் மழை பெய்தது. இது டெங்கு பரவ காரணமாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் கேரள மாநிலத்தில் அசாத்தியமாக டெங்கு பரவியது. இதனால் மீண்டும் சுகாதாரத்துறை உஷாரானது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் கொசுத்தொல்லை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நாகர்கோவில் நகரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு தினமும் வேலைக்கு சென்றுவரும் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். திருவனந்தபுரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு டெங்கு கொசுவால் வைரஸ் ஏற்பட்டிருந்தால், அந்த நபர் நாகர்கோவில் வரும்போது அவரை கொசு கடித்தால் அந்த கொசு டெங்கு வைரசை பரப்பும் கொசுவாக மாறிவிடுகிறது. எனவே ஒருங்கிணைந்த கொள்ளை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டே மாத இடைவெளியில் மூன்றாவது முறையாக மீண்டும் டெங்கு மிரட்டுகிறது.

இந்தமுறை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நாகர்கோவில் வடிவாவரத்தை சேர்ந்த கோயில் பூசாரி கண்ணன் (34) நேற்று பரிதாபமாக இறந்திருக்கிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் அவரது உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் நேற்று காலை உயிரிழந்தார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வடிவீஸ்வரம் பகுதியில் டெங்கு பாதிப்பு இல்லை என்று வழக்கம்போல மறுத்து வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் மட்டும் 20 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 48 பேர் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பேருக்கு டெங்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

ஒரு வார்டுக்கு ஒரு கொசுவுக்கு புகை அடிக்கும் மிஷின் வீதம் நகராட்சியில் 52 கொசு மருந்து அடிக்கும் மிஷின்கள் இருக்கின்றன. ஆனால் கொசு மருந்து முறையாக அடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது இல்லை. ஒரு வீட்டுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் சொல்லுவது வழக்கம். ஆனால் அது நடைமுறையில் வந்ததா என்றால் கேள்விக்குறிதான். வீடுகளில் உள்ள பிரிட்ஜ், கிரைண்டர் ஆகியவற்றில் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா எனவும் கண்காணிக்க வேண்டும். நகர பகுதிகளில் ஓடைகளில் தண்ணீர் தேங்காதவாறு  சுத்தப்படுத்தி கொசு மருந்து தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் டெங்கு பாதிப்பை தடுத்திருக்கலாம். திறந்த நிலையில் உள்ள சாக்கடைகள், புதர்மண்டிக்கிடக்கும் நிலப்பரப்புகள்  கொசு உற்பத்தி கேந்திரங்களாக உள்ளன.

தமிழகத்தில் டெங்கு சிகிச்சைக்கான அனைத்து மருந்துகள் மற்றும் பிளேட் லெட்டுகள் போதிய அளவு இருப்பதாக அரசு சொல்லுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் டெங்கு பாதித்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டால் பிளேட்லெடுக்காக முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலைதான் உள்ளது. வசதி படைத்தவர்கள் தனியார் ரத்த வங்கிகளிலிருந்து பிளேட்லெட்டுகள் விலைக்கு வாங்கி செலுத்துகின்றனர். ஒருமுறை பிளேட்லெட் செலுத்த சுமார் 4 ஆயிரத்து 800 ரூபாய் வரை ஆகிறது. ஒருவருக்கு மூன்று லட்சத்துக்கு மேல் பிளேட் லெட்டுகள் எண்ணிக்கை வர ஐந்துக்கும் மேற்பட்ட முறை செலுத்த வேண்டியிருக்கிறது.

ஆயுர்வேத மருந்துடெங்கு கொசுவை கட்டுப்படுத்தவும், டெங்கு பாதிப்பை தடுக்கவும் ஆயுர்வேத முறைகள் குறித்து கோட்டாறு ஆயுர்வேத மெடிக்கல் காலேஜ் டீன் கிளாரன்ஸ் டேவி கூறுகையில், டெங்கு கொசுக்கள் வீட்டுக்குள் வராமல் இருக்க ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் அபராஜித தூபம் எனப்படும் ஏழு மூலிகை மருந்துகள் அடங்கிய பொடியை சாம்பிராணி போன்று வீடு முழுவதும் புகைக்கலாம். மேலும் வேப்ப எண்ணெயில் அகல் விளக்கு ஏற்றி வைத்தாலும் டெங்கு கொசுக்கள் அண்டாது. வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எந்த எண்ணெய்களை உடலில் தேய்த்தாலும் டெங்கு கொசுக்கள் நம்மை தொடாது. யாருக்காவது காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே ஆயுர்வேத மருந்துக்களான சடங்க பானியம், பாரங்கி கஷாயம், சுதர்சன மாத்திரை, இந்துகாந்த கஷாயம், அமிர்தோத்தர கஷாயம் ஆகியவைகளை குடிக்கலாம். மறறபடி பாட்டி வைத்தியங்களான பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு ஆகியவற்றையும் குடிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS