15
Fri, Dec
18 New Articles

புத்தன் அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்

News

புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கூறினர்.

நாகர்கோவில், செப்.22: குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணி, மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, மருங்கூர் செல்லப்பா, பத்மதாஸ், விஜி, முருகேசபிள்ளை, வருக்கத்தட்டு தங்கப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 கூட்டம் தொடங்கியதும் மழை அளவு, அணைகளில் நீர் இருப்பு, உரம் மற்றும் விதைகள் இருப்பு விவரம் தெரிவிக்கப்பட்டது. 

 பின்னர் நடந்த கூட்டத்தில் விவசாயிகளின் காரசார விவாதம் விவரம் வருமாறு:–

குமரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒருசில பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

அதிகாரிகள்:– ஏற்கனவே கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.67 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1 கோடியே 8 லட்சம் கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையைப் பெற வட்டார அளவில் “சூப்பர் செக்’’ என்ற முறையில் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அரசு நிவாரண தொகையை அனுமதிக்கும். அதையடுத்து தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும். 

இதேபோல் வாடல் நோய் மற்றும் காய்ப்புக்குறைந்த மரங்களை வெட்டி அகற்றும் திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்துக்கு கடந்த நிதியாண்டில் (2016– 2017) ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதே திட்டத்தின்கீழ் 2017– 2018–ம் நிதியாண்டுக்கு ரூ.1 கோடியே 79 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

நாகர்கோவில் நகரின் குடிநீருக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து விவசாயிகள் விவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் கூறியதாவது:–

நாகர்கோவில் நகர குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் எடுத்து, விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வந்து சேரும் இடமான புத்தன் அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக நாங்கள் அறிகிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளாகிய நாங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்கமாட்டோம். தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம். 

எனவே அரசால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள உலக்கை அருவி திட்டம், குழித்துறை தாமிரபரணி திட்டம் போன்றவற்றை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

:– இதுதொடர்பாக விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார். 

விவசாயிகள்:– கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக முடிவுகள் எடுக்கப்பட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள நேரத்திலும் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. ஒருசில இடங்களுக்கு தண்ணீர் அதிகமாக கொடுத்து வீணடிக்கப்பட்டுள்ளது. தேவையான பிற பகுதிகளுக்கு தண்ணீர் சரிவர வழங்கப்படவில்லை. 

இதற்கு பதில் அளித்த பேசிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், “2 நாட்களுக்கு ஒருமுறை முறைவைத்து அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கி உள்ளோம். தண்ணீர் தேவை உள்ள இடங்களுக்கு மட்டுமே தண்ணீர் கொடுத்துள்ளோம்” என்றனர். தொடர்ந்து விவசாயிகளும், அவர்களுக்கு எதிராக பேசினர். இதனால் சிறிது நேரம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:–

மேலும் நீர்நிலை புறம்போக்குகளை அளவீடு செய்ய சர்வேயர்கள் சரியாக வருவதில்லை. வந்தாலும் சரியாக அளவீடு செய்வதில்லை. அளந்தபிறகு அதற்குரிய ஆவணங்களை முறையாக வழங்குவதும் இல்லை. பழையாறு, குழித்துறை தாமிரபரணியாறு மற்றும் வாய்க்கால்களின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் சேதம் அடைந்திருப்பதால் மழைநீர் வீணாகிறது. எனவே சேதம் அடைந்துள்ள தடுப்பணைகளை சரிசெய்ய வேண்டும். கால்நடைகளுக்கான தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால பயிர்க்கடன்களை நீண்டகால கடனாக மாற்ற அரசு ஆணை பிறப்பித்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் செயல்படுத்தாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். 

பேச்சிப்பாறை அணையை கட்டிய என்ஜினீயர் அலெக்சாண்டர் மிஞ்சின் 150–வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர். இதற்கு அதிகாரிகள் பதில் அளித்தும், விளக்கம் அளித்தும் பேசினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS