23
Thu, Nov
10 New Articles

பரக்காணியில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு

News

குழித்துறை, ஆக. 29: தமிழக அரசு அதிகாரிகளால் குறியீடு செய்யப்பட்டுள்ள பரக்காணியில் தடுப்பணைக் கட்டும் பணியை உடனடியாக துவங்க வேண்டுமென இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்

குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் விளவங்கோடு தாலுகா மக்களின் ஜீவாதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த தாமிரபரணி ஆறானது குழித்துறை கொடுவனந்தோட்டம் அஞ்சாலிக்கடவு,  முளமூட்டுக்கடவு, மங்காடு, பருத்திகடவு, கல்லுபாலத்தடிக்கடவு, பரக்காணி வழியாக தேங்காப்பட்டணம் கடலில் சங்கமிக்கிறது. இந்த ஆறானது எக்காலத்திலும் வற்றாததால் வற்றாத ஜீவ நதிஎன்று செல்லமாக அழைப்பார்கள். கணபதியான் கடவிலிருந்து தேங்காப்பட்டணம் வரை ஆறு மினி காயல் போல காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடதக்கது ஆகும். இந்த ஆறு தான் விளவங்கோடு தாலுகா  மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்த ஆற்று தண்ணீரை நம்பியே பொரும்பாலோர் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்துள்ள குடிநீர் கிணறுகளிலிருந்தும் குடிநீர் திட்டங்களிலிருந்தும் பைங்குளம், புதுக்கடை, முன்சிறை, வாவறை, நடைக்காவு, சூழால், குளப்புறம், அடைக்காகுழி, ஏழுதேசம், கொல்லம்கோடு, விளவங்கோடு, பாலப்பள்ளம், கருங்கல், உண்ணாமலைக்கடை, கிள்ளியுர், கீழ்குளம் போன்ற பஞ்., களுக்கும் குழித்துறை நகராட்சிக்கும் குளச்சல் நகராட்சியின் ஒருசில பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தேங்காப்பட்டணம் மீன்பிடிதுறைமுகம் துவங்குவதற்கு முன்னால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. மீன்பிடி துறைமுகம் தொடங்கிய பின்னர் கடல் நீர் ஆற்றுநீரில் கலந்ததால் பொதுமக்களுக்கு உப்பு சுவையுடன் கூடிய குடிநீர் வினியோகிக்கபடுகிறது. இப்படி உப்பு குடிநீர் வழங்குவதால் குடிநீர் திட்டங்களுகான உபகரணங்கள் துருபிடிக்க தொடங்கி கோடிகணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் பைங்குளம், புதுக்கடை, முன்சிறை, விளாத்துறை போன்ற பஞ்., களுக்கு உட்பட்ட பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உப்பு நீராக மாறிவருவதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் பரக்காணியில் தடுப்பணைகட்ட வேண்டுமென வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ஏற்று ராஜேஷ்குமார் எம்.எல.ஏ., சட்டசபையில் பேசியதன் விளைவாக பரக்காணியில் தடுப்பணை கட்ட 18 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பரக்காணியில் அதிகாரிகள் தடுப்பணை கட்டுவதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து குறியீடு போட்டுள்ளனர். அந்த இடத்திலே தடுப்பணை விரைவில் கட்ட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்

BLOG COMMENTS POWERED BY DISQUS