23
Thu, Nov
10 New Articles

எந்த அரசியல் கட்சிக்கும் வளர்ப்புத்தந்தையாக இருக்க பா.ஜ.க, தயாராக இல்லை: பொன் ராதாகிருஷ்ணன்

News

வசந்தம் நகர் கொடியேற்றுவிழாவில் பா.ஜ.க, கொடியை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். 

நாகர்கோவில்,ஆக.17:  நாகர்கோவில் நகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் பா.ஜ.க,மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் ஏற்பாட்டில் கொடியேற்றுவிழா  நடந்தது. பா.ஜ.க, கொடியை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் தேவ், நகர தலைவர் ராஜன், மணிசுவாமிகள், பிரசார அணி மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கொடியேற்று விழாவுக்குப் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பிரதமர் மோடி 125 கோடி மக்களும் ஒருங்கிணைந்து பணிபுரிந்தால் இந்தியாவை மகோன்னதமான நிலைக்கு கொண்டுசென்று, நாட்டை சொர்க்கபூமியாக மாற்றமுடியும் என கூறியிருக்கிறார். மோடியின் கோரிக்கையை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாடுமுழுக்க இருக்கும் 12 கோடி பா.ஜ.க, தொண்டர்கள்  ஜாதி மத மொழி பாகுபாடு இல்லாமல் ஒருங்கிணைந்து பணிபுரிந்து லஞ்சம் ஊழலற்ற நாட்டை உருவாக்க உறுதிமொழி ஏற்றிருக்கிறோம்.

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்துக்கு நாம் போக வேண்டாம். உலகத்தில் தலைசிறந்த நாடாக நாட்டை உருவாக்க வேண்டும்.

 டுவிட்டர், பேஸ்புக் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. எங்களைப் பற்றி கூறியிருந்தால் பதில் சொல்லலாம். கமல் நடிகர் என்ற முறையிலும் அவரது கருத்துக்கள் எங்களுக்கு உடன்படாத நிலையில் இருப்பதாலும், பிற இயக்கங்களை பற்றி அவர் சொல்வதற்கு நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை.

நாகை கடலூர் மாவட்டங்கள் பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறார்கள். புதிய திட்டங்கள் தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என ஒரு சதி வலை பின்னப்படுகிறது. அதில் அவர்கள் தற்காலிக வெற்றியும் பெற்றுள்ளனர். நம் மாநிலத்தில் வேண்டாம் என சொல்லும் திட்டத்தை வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு முன்னேற்றம் அடைகின்றனர்.

திட்டங்கள் வேண்டாம் என சொல்பவர்கள் மாநிலத்துக்கு என்ன திட்டம் வேண்டும் என அவர்கள் கேட்கவில்லை.

தமிழகத்தில் 50 ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. தி.மு.க. அதிமுக எந்த தொழிற்சாலையும் கொண்டு வரப்படவில்லை. அதனால் வேலையில்லா நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி, விவசாய முன்னேற்றம், கல்வியில் தமிழகம் முன்னிலை வகிக்க வேண்டும். மக்கள் நலனை தமிழகத்துக்கு கொண்டு சேர்ப்பதில் மத்திய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்து விட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களும் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு குறைந்து கொண்டே வருகிறார்கள்.

எந்த அரசியல் கட்சிக்கும் வளர்ப்புத்தந்தையாக இருக்க பா.ஜ.க, தயாராக இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க,வை வளர்க்கதான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். கூட்டணி என்பது வேறு விஷயம். கர்நாடகத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்யும் கேவலமான நிலையை தமிழகத்தில் கொண்டுவந்தது 50 ஆண்டுகால திராவிட ஆட்சி. மழை பெய்து உபரி தண்ணீரை தமிழகத்துக்கு அனுப்பி அதை கர்நாடகா கணக்கு வைக்க வேண்டாம். இதை திருநாவுக்கரசு போன்றவர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் சொல்லட்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருக்கும் வரை நமக்கு தண்ணீர்வர வாய்ப்பு இல்லை. காங்கிரஸ், தி.மு.க. கர்நாடகத்துக்கு கண்டனம் தெரிவிக்காது.கர்நாடக காங்கிரஸ் அரசு தோற்றுப்போன அரசு. எப்போது தேர்தல் வந்தாலும் பா.ஜ.க, வெற்றிபெறும். காவிரி பிரச்னையை மையப்படுத்தி தங்கள் மாநில அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் விரும்புகிறது. அதை ஆதாயமாகக்கொண்டு மீண்டும் ஆட்சி பிடிக்கலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. நெடுவாசல் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகண்டு 150 நாட்கள் ஆகிவிட்டன. மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. தஞ்சை, நாகை மண்டலங்களை கிழக்கு கடற்கரை சாலையை சென்னை முதல் கன்னியாகுமரி வரை கொண்டுவர திட்டமிடுள்ளோம். மழை பொய்த்துவிட்டால் விவசாயிகள் தொழில் பெருக தொழிற்சாலை, சுற்றுலாத்துறை மூலம் வருமானம் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் 54 லட்சம் கி.மீ. ரோடு நமக்கு இருக்கிறது. அதிகப்படியான சாலை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இதில் தேசிய நெடுஞ்சாலை 2 சதவீதம்தான். 1.15 லட்சம் கி.மீ. தேசிய நெஞ்சாலையாக இருக்கிறது. அதை 2 லட்சம் கி.மீ.ஆக மாற்ற முயற்சிக்கிறோம். தேசிய நெடுஞ்சாலையில் 28 சதவீதம் விபத்து நடக்கிறது. விபத்தை பாதியாக குறைக்க திட்டமிட்டு வேலை செய்கிறோம். விபத்து ஏற்படாமல் இருக்க ரோடு டிசைனை மாற்றி எல்லா வகையிலும் தகுதி நிறைந்த சாலையாக மாற்ற திட்டமிடுகிறோம். வாகனங்கள் விபத்து நடந்தாலும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம்.

78 சதவீதம் விபத்து ஓட்டுனரால் நடக்கிறது. எனவே தமிழகம் உட்பட 16 இடங்களில் ஓட்டுனர்களுக்கு பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் என் மாநில மாணவர்களின் தகுதியை ஒருகாலமும் அழிக்க நான் தயாராக இல்லை. நீட் குறித்து எந்த தலைவர்கள் கருத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS