23
Wed, Aug
6 New Articles

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூபாய். 4 கோடியில் சூழியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் அக்டோபரில் திறக்க முடிவு

News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூபாய். 4 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் முக்கிய சாலையில் அரசு பழத்தோட்டம் செயல்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் அரண்மனைக்கான பழத்தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், மகாராஜா கன்னியாகுமரியில் ஓய்வு எடுப்பதற்காகவும் கன்னியாகுமரியில் பழத்தோட்டம் ஏற்படுத்தப்பட்டது. 

சுமார் 31 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பழத்தோட்டத்தில் விளையும் பழங்கள் அரண்மனைக்கு அனுப்பப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளாவில் இருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்த போது, இந்த பழத்தோட்டம் தமிழக வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்த பழத்தோட்டத்தில் மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி போன்ற பழ வகைகளும், பிச்சி, மல்லிகை, முல்லை, ரோஜா, குரோட்டன்ஸ் போன்ற மலர் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ₹4 கோடியில் சூழியல் பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவில் செயற்கை நீரூற்று, சிறுவர் பூங்கா, மூங்கில் பூங்கா, மூலிகைத்தோட்டம், பூந்தோட்டம், அலங்காரச் செடிகள் மற்றும் மரங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன. கட்டுமானப் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்ததும் பூங்காவுக்குத் தேவையான அலங்கார செடிகள் நடும் பணி தொடங்க உள்ளது. விரைவில் முழுப்பணிகளும் முடிக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் பூங்கா திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS